பெண் பத்திரிகையாளர் ஒருவர், தன்னுடைய கர்ப்பகால விடுமுறைக்கு பிறகு குழந்தையுடன், மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்படியான ஒரு நிகழ்வு, தற்போது அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. இன்றைய கால கட்டத்தில் பெண்கள்,அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். இருப்பினும், பெண்கள் தங்களின் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
அதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று ஏற்பத்திய தாக்கம், பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். அவற்றில் பெண்கள் கூடுதல் பொறுப்புடன் இருக்கின்றனர். இந்த சமயத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்கள், குழந்தையையும் கவனித்துக் கொள்ள வேண்டும் வேலையையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு பணிகளை திறம்பட சிறப்பாக செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, மற்றுமொரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் வானிலை அறிக்கை வாசிக்கும் ரெபாக்கா தன்னுடைய கர்ப்பகால விடுமுறைக்கு பிறகு குழந்தையுடன், மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இது தொடர்பான தகவலை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக ரெபாக்கா கூறும்போது,
வானிலை அறிக்கை வாசிக்கும் என்னுடைய நிகழ்ச்சிக்கு வெகுசில நிமிடங்களே இருக்கும் போது என்னுடைய குழந்தை விழித்துக் கொண்டாள். நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் என்னை குழந்தையுடன் பார்த்துவிட்டு ஃபியோனாவும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றாளா என்று கேட்ட போது அதில் தவறு ஏதும் இல்லை என்று முடிவு செய்து தன்னுடைய குழந்தையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என்றார்.
மேலும் அவர், பெற்றோராக பொறுப்புகள் அதிகரிக்கும் போது எல்லாருடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் வேலை பார்க்கும் போது, குழந்தைகள் அழுகின்றனர், அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இரண்டுக்கும் சமநிலையில் அவர்களின் பணி தொடர்கிறது. எனவே இதில் மறைக்க ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் நான் அவளோடு நிகழ்வில் பங்கேற்றேன் என்று கூறினார்.
பெண் தலைவர்கள் அதிகமாக இருக்கின்ற நாடுகளில், பெண்களின் அன்றாட நிகழ்வுகள் குழந்தைகளையும் உள்ளடக்கியது என்பதை வெளிப்படுத்த பெண்கள் ஒரு போதும் தயங்குவதில்லை. நியூசிலாந்து பிரதமர் தன்னுடைய குழந்தையை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்தார். அதே போன்று சமீபத்தில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய குழந்தையை நாடாளுமன்றத்திற்கு தூக்கி வந்தார். அதன் பின்னர் அவருக்கு அனுப்பப்பட்ட கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வரிசையில் ரெபாக்கா, தற்போது இணைந்துள்ளார்.இது தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
