Asianet News TamilAsianet News Tamil

பிரதோஷம் என்பது என்ன ? ஏன் மாலை நேர வழிபாடு வேண்டும் ?

meaning of-prathosham
Author
First Published Jan 3, 2017, 6:18 PM IST


பிரதோஷம் என்பது என்ன ?

பிரதோஷம் என்பது பாவங்களை தொலைத்துக் கொண்டு மோட்ஷத்தை அடைய செய்யப்படும் வழிபாடு ஆகும்.  பிரதோஷம் அதாவது பிரதி + தோஷம் என இரு வார்த்தைகளைக் கொண்டது. பிரதி என்பது ஒவ்வொன்றும் எனவும், தோஷம் என்பது பாபத்தையும் குறிக்கும். ஆகவே பிரதோஷம் என்பது ஒவ்வொரு பாபத்தையும் தொலைத்துக் கொள்ளும் வழிபாடு ஆகும்.

பிரதோஷம் என்பதை எப்போது செய்யலாம்?   

ஒவ்வொரு மாதமும் சுக்ல மற்றும் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் திரியோதசியன்று சாயங்காலத்தில், சிவபெருமான் ஆனந்த நடனமாடும் நேரத்தில் அவரை வணங்கினால் நம் வேண்டுதல்களுக்கு பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. அந்த நேரத்தில்தான் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே உள்ள பகுதியில் சிவபெருமான் நடனம் ஆடுவதாக ஐதீகம் உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு இடைப்பட்ட காலத்தில் 13 ஆம் திதியன்று வருவது பிரதோஷ தினம். 

பிரதோஷதினத்தன்று சாயங்காலவேளையில் ஏன் சிவ வழிபாடு செய்ய வேண்டும்? 

சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்கித் துதித்தால் வாழ்வின் அனைத்து வளமும் பெருகுமாம். அதுமட்டும் அல்ல அன்றுதான் சாயங்காலத்தில் அனைத்து தேவர்களும், தெய்வங்களும் பூமிக்கு வந்து சிவபெருமானை வணங்கித் துதிக்கின்றார்களாம்.

அப்போது நாமும் ஆலயத்துக்கு சென்று சிவ வழிபாடு செய்யும்போது  அங்கு  கண்களுக்கு புலப்படாமல் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ள  தெய்வங்களின் ஆசிகளும் அங்கு செல்லும் ஒருவருக்கும் கிடைக்கின்றது.  தொடர்ந்து 120 பிரதோஷ தினங்கள் எவர் ஒருவர் சிவவழிபாடு செய்வாரோ அவருக்கு மீண்டும் பிறவாமை எனும் பலன் கிட்டுமாம்.

பிரதோஷம் குறித்து ஒரு புராணக் கதை காலம் காலமாக கூறப்பட்டு வருகின்றது. அந்த கதையின்படி ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி நாகத்தின் உடல் முழுவதும்  காயம் ஏற்பட, அந்த காயத்தின் வலியினால் அது கக்கிய கொடிய விஷத்தினால்  உலகமே அழிந்து விடும் அளவு வெப்பம் ஏற்பட தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் ஓடிச் சென்று அழிவில் இருந்து உலகைக் காக்குமாறு வேண்டிக் கொண்டார்கள்.

ஆகவே அந்த கொடிய விஷத்தின் தன்மையை தணிக்க  அந்த விஷம் பூமியில் விழுவதற்கு முன்பாகவே அதை தமது கையில் ஏந்திக்கொண்ட சிவபெருமான் அந்த விஷத்தை தானே உண்டு அனைவரையும் காப்பாற்றினார். ஏகாதசி பதினோராம் நாள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அவரே உலகை படைத்தவர் என்றாலும் கூட  அந்த குறிப்பிட்ட விஷம் அவரது உடலுக்குள் சென்று இருந்தால் அவர் மரணம் அடைந்து இருப்பார். அது இயற்கையின் நியதியாகும்.

ஆனால் அந்த விஷத்தை சிவபெருமான் விழுங்கிய பின் அதை பற்றிக் கவலைப்படாத தேவர்கள் மீண்டும் தமது காரியத்திலேயே கண்ணாக இருந்து விட்டார்கள் (அமிர்தம் கடைதல்). அதைக் கண்ட பார்வதி தேவியானவள் தனது கணவருக்கு அந்த விஷத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக்  கூடாது என பதறிப் போய் அவர் அருகில்சென்று அவர் தொண்டையை தடவிக் கொடுக்க அந்த விஷம் அப்படியே உறைந்து கட்டியாகி அங்கேயே தங்கி நிற்க, அதன் நச்சுத்தன்மையையும் இழந்தது.

ஆனால் அந்த விஷத்தின் வெப்பத்தினால் சிவபெருமானின் தொண்டை  காய்ந்து போய் நீல நிறமாகி விட்டது. ஆகவேதான்  அவருக்கு நீலகண்டன் அதாவது நீல நிற தொண்டையைக் கொண்டவர் என்ற பெயர் ஏற்பட்டது.

அவை அனைத்துமே திரியோதசிஅன்று சாயங்கால வேளையில் நடைபெற்றது. சற்றே நேரத்தில் தம் சுய நினைவுக்கு வந்த தேவர்களும் அசுரர்களும் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு  பதறிப்போய் தமக்காக விஷத்தை உண்ட சிவபெருமானின் நிலை என்ன ஆயிற்று என்பதை கவனிக்காமல் இருந்து விட்டோமே என வருந்தி அவரிடம் ஓடிச் சென்று தாம் அறியாமையினால் அவருக்கு நன்றி கூறாமல் இருந்து விட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்க சிவபெருமான் அவர்களை மன்னித்தார்.

 அவர்களுக்கு அதனால் ஏற்பட்டு இருந்த அனைத்து பாபங்களையும் விலக்கினார். அந்த ஆனந்தத்தில் அவர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே அற்புதமான நடனமான களி நடனம்  எனும் நடனத்தை ஆடினார். பார்வதி தேவியும் அவர் அருகில் நின்றவாறு அவர் ஆடிய நடனத்தை ஆனந்தமாக ரசித்துக் கொண்டு இருந்தார்.

 அதனால்தான் சுக்ல மற்றும் கிருஷ்ண பட்சத்தில் திரியோதசையின் சந்தியா காலம் பிரதோஷ காலம் என பெயர் பெற்றது. அன்றைக்கு அந்த நேரத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதியை நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே இருந்து பார்த்து வணங்கி பூஜை செய்தால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆயிற்று.

Follow Us:
Download App:
  • android
  • ios