Pongal 2023: வாடிவாசலில் சீற தயாராகும் காளைகள்! ஜல்லிக்கட்டு போட்டி எந்தெந்த தேதிகளில் எங்கு நடக்கிறது?
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது.
மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?
இதுபோல தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு விதமாக காளைகளுடனா விளையாட்டு தொடர்ந்துவருகிறது. அதில், மதுரையில் நடைபெறும் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் பொங்கலை ஒட்டிய தினங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
சான்றிதழ்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். டோக்கன் வைத்திருக்கும் மாடு பிடி வீரர்கள், காளைகள் மட்டுமே போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு 4544 மாடுகளுக்கும், 2001 மாடுபிடி வீரர்களும் என மொத்தம் 6545 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டு 8,500 நபர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பிரபலமடைந்ததை அடுத்து, நாட்டு மாடுகளை வாங்க இளைஞர்கள் அதிகளவில் முன்வருகின்றனர். ஆண்டு முழுவதும் அவற்றை பராமரிக்க பணம் சேர்க்கும் கல்லூரி மாணவர்களும் உள்ளனர். நாட்டு மாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க..நாட்டு நாட்டு பாட்டுக்கு இவங்க ஆடியிருக்காங்களா.? ஆச்சர்யப்பட்ட ஆனந்த் மஹிந்திரா - வைரல் வீடியோ!