மாடுகளை பாதுகாக்க, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் பலவிதமான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், மாடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், காளை மாடுகள் குறித்த தகவல்களை விவசாயிகள் பெற வேண்டும் என்பதற்காக பிரத்யேக இணைய சேவையை தொடங்கி நடத்தி வருகிறது மத்தியப் பிரதேசத்தின் கால்நடைகள் பராமரிப்பு அமைச்சகம்.

cssbhopal.com என்ற இணையதளத்தில், காளை மாடுகளின் வகை, பிறந்த தேதி உள்ளிட்ட பல தகவல்கள் இருப்பதாகவும், 16 வகைகளை சேர்ந்த சுமார் 200 காளைகள் பற்றிய தரவுகளை சேகரித்து பதிவேற்றம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் காளைகளின் Semen-ஐ செயற்கையான முறையில் சேகரித்து பதப்படுத்தி வைத்து, அது குறித்த தகவல்களையும் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறது மத்தியப் பிரதேச கால்நடைகள் பராமரிப்பு அமைச்சகம்.

 

மாடுகளின் புகைப்படம், அவற்றின் உயரம், எடை, உரிமையாளர் உள்ளிட்ட பல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருப்பது மட்டுமல்லாமல் இனப்பெருக்கத்திற்காக காளைகளை தேடும் பசு மாடு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த இணையதளம் மிக பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரி தீபாலி தெஷ்பாண்டே தெரிவித்துள்ளார். பால் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்தியப் பிரதேச அரசின் இந்த புதிய முயற்சி, அம்மாநில விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.