இதைத்தான் நீங்களும் சாப்பிடுறீங்களா? ஜாக்கிரதையா இருங்க! எச்சரிக்கும் ரசயான கலப்பட வீடியோ
வாடிய கீரையை ரசாயனத்தில் முக்கி எடுத்ததும் சில நொடிகளில் எப்படி பசுமையானதாக மாறுகிறது என்று இந்த வீடியோவில் காட்டப்படுகிறது.
காய்கறிகளை புதிது போல காட்சிப்படுத்த பல தவறான முறைகள் கடைப்பிடிக்கப்படுவதைப் பார்த்திருப்போம். இதனால் பலர் மிகவும் கவனமாக காய்கறிகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். கலப்படம் இல்லாத சரியான பொருளை பார்த்து வாங்குவதையே வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள்.
தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவரும் ஒரு வைரல் வீடியோ நமக்கு முற்றிலும் திகிலூட்டும். கீரையை ஃப்ரெஷ்ஷாக காட்ட ரசாயனக் கரைசலில் முக்கி கலப்படம் செய்வது எப்படி என்று அந்த வீடியோவில் காட்டப்படுகிறது. இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த இரண்டே நிமிட வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே அதிமானவர்களால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. சுமார் 5 லட்சம் பேர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். இந்த வீடியோவில் வாடி வதங்கிய கீரையை ரசாயனக் கலவையில் தோய்த்து எடுத்தவுடன் ஒருசில வினாடிகளில் புதிது போல் பசுமையான நிலையை அடைவதைக் காணமுடிகிறது.
Linkedin பக்கத்தில் தேவராஜன் ராஜகோபால் என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை அமித் ததானி என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2021ஆம் ஆண்டே இந்த வீடியோவைத் தான் பார்த்ததாகவும் அமித் ததானி சொல்லி இருக்கிறார். இருப்பினும் இந்த வீடியோ எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் சரியாகத் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆப்பிள் மீது மெழுகு பூசுவது, தர்பூசணிக்கு சாயம் ஏற்றுவது, பல பொருட்களில் பூச்சிகள் வருவதைத் தடுக்க ஸ்பிரே அடிப்பது போன்றவை கேள்விப்பட்டிருப்போம். நிறம் மாறாமல் இருக்கவும், மணம் மாறாமல் இருக்கவும் ரசாயனங்களை பயன்படுத்துவதும் தெரிந்திருக்கும். ஆனால் கீரையை வாடாமல் வைக்க இப்படி ஒரு கலப்பட வழிமுறை இருப்பது பலருக்கும் தெரியாதது.
இந்த வீடியோவைப் பார்த்த பலர் ரசாயனக் கலப்பினால் உணவுப் பொருட்கள் நச்சுத்தன்மை அடைவது பற்றி கவலை தெரிவிக்கின்றனர். சில இந்த வீடியோவை கண்டிக்கவும் செய்துள்ளனர். ரசாயனக் கலப்பு இல்லாத இயற்கை உணவு என்பது இப்போது பணக்காரர்களுக்கானதாக உள்ளது என்றும் இதுபோன்ற வீடியோக்கள் மூலம் சாதாண மக்கள் மத்தியில் அச்சுத்தைப் பரப்புகிறார்கள் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.