பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தொடர்ந்து வண்டி வண்டியாய் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பில் பெரும் அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு உள்ளது என்ற சந்தேகம் வந்ததை அடுத்து சிபிசிஐடி போலீசாருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் 9488442993 என்ற தொலைபேசி எண்ணிற்கும், cbcid.cbe.city@gmail.com, மின்னஞ்சல் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்திருந்தது.

சிபிசிஐடி அதேபோன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள சிபிசிஐடி எஸ்பி அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும் இதனிடையே பாலியல் தொடர்பான எந்த வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்புவதை நிறுத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு பரப்பினால் அது விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதற்காக சமூக வைத்தலங்களான பேஸ்புக் ட்விட்டர் வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனத்திற்கு சிபிசிஐடி போலீசார் சார்பாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது வரை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர்களை காவலில் எடுத்து விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் அவர்கள் சார்ந்த பல இடங்களில் தொடர் சோதனை செய்து வருகின்றது. சோதனையில் கிடைக்கக் கூடிய லேப்டாப் பென்டிரைவ் மொபைல் போன் உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வின் முடிவில் வெளி வரும் தகவலை ஆதாரமாகக் கொண்டு தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சிபிசிஐடி போலீசாருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட பின் புகார் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட எண்ணிற்கு தொடர்ந்து போன்கால்கள் வருவதும் எதிர்பார்க்காத அளவிற்கு புகார்கள் வந்து வண்டி வண்டியாய் குவிகின்றது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் கோவை எஸ்.பி பாண்டியராஜன் 4 வீடியோக்கள் மட்டுமே உள்ளது என செய்தியாளர்களின் பேட்டியின் போது தெரிவித்திருந்தார் முன்னுக்கு பின் முரணாக ஒரு எஸ்பி இவ்வாறு தெரிவித்ததன்  காரணமாக விசாரணையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இழந்த வண்ணம் இருக்கின்றது. சிபிசிஐடி ஆவது பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கிடையில் மாணவ மாணவிகளும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் தொடர் போராட்டத்தில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.