கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.இதுவரைக்கும் பாதிப்புகள் மட்டும் இருந்து வந்த நிலையில் மாவட்டத்தில் முதல் பலியாகி பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் இவர்.


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 77 பேர் பாதிக்கப்பட்டனர். சேலம், கரூர் , நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் பூரண குணம் அடைந்தனர்.  கடந்த 20 நாட்களாக எவ்வித தொற்றும் ஏற்படவில்லை. சிகப்பு மண்டல பட்டியலில் இருந்த நாமக்கல் மாவட்டம் ஆரஞ்சு பட்டியலுக்கு மாறியது.  அண்மையில் டெல்லியிலிருந்து மல்லசமுத்திரம் வந்த தந்தை, மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 ஹைதராபாத்திலிருந்து திருச்செங்கோடு கூத்தப்ப்பள்ளி கிராமத்துக்கு வந்த 47 வயது லாரி ஓட்டுநருக்கும் தொற்று உறுதியானது. இவர்களும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் லாரி ஓட்டுநரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

 கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் அவரை கரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த லாரி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் இதுவரை ஒருவர் கூட உயிரிழக்காத நிலையில் முதல் பலி ஏற்பட்டிருப்பது மாவட்ட நிர்வாகத்தையும், அரசு மருத்துவர்களையும் அச்சமடையச் செய்துள்ளது.