தினமும் கூல்ட்ரிங்ஸ் குடிச்சா முடி கொத்து கொத்தா உதிருமாம்.. ஏன் தெரியுமா?
காபி குடிப்பவர்களை விடவும், கூல்ட்ரிங்ஸ் அருந்துபவர்களுக்கு தான் முடி உதிர்வு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கூல்ட்ரிங்ஸ், எனர்ஜி டிரிங்க் ஆகியவை குடிக்கும்போது ஆற்றல் அதிகம் ஆனது போல உணர்வோம். அதற்கு அதில் உள்ள கஃபைன் (caffeine), கூடுதலான சர்க்கரை ஆகியவை தான் காரணம். இவை தான் நம் முடி உதிர்வுக்கும் காரணம் தெரியுமா? நாம் அருந்தும் காபியை விட இவற்றில் தான் அதிகமான கஃபைன் (caffeine) உள்ளது. இது முடி உதிர்வுக்கு எவ்வாறு துணை போகிறது என்பதை இங்கு காணலாம்.
ஆரோக்கியமாக வாழ நினைக்கும் ஒரு மனிதர் நாளொன்றுக்கு 5இல் இருந்து 12 டீஸ்பூன் சர்க்கரை எடுத்து கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். இதை உலக சுகாதார அமைப்பும் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் தாகம் தணிய, புத்துணர்வூட்ட என்ற காரணங்களுக்காக நாம் அருந்தும் கூல்ட்ரிங்ஸ் மூலம் குறைந்தபட்சம் 5 டீஸ்பூன் சர்க்கரை உடலுக்குள் செல்கிறது. இது உடலுக்கு நல்லதல்ல. அது தவிர காபி, டீ, இனிப்பு வகைகள் என வெவ்வேறு வழியில் இனிப்புகளை எடுத்து கொள்வோம்.
ஹார்மோன் சமநிலை
நம் உடலை இயந்திரம் போல தான் கருத வேண்டும். நாம் உண்ணும் உணவுகள் அதன் செயல்பாட்டை பாதிக்கும். கேக், டோநட், ஏதேனும் குளிர் பானங்களை ஒரே நாளில் எடுத்து கொள்கிறோம் என வைத்து கொள்வோம். இதில் இருக்கும் கூடுதலான சர்க்கரை நல்ல ஆற்றலை கொடுப்பதாக தோன்றினாலும், உடலில் பயோகெமிக்கல் செயல்பாடுகளும் நடக்கும். இதனால் ஹார்மோன் சமநிலை மாறும். இதை தவிர்க்க வேண்டும்.
ஆற்றல் குறையுமா?
நாம் ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று கப் காபி அருந்தினால் பாதிப்பு இல்லை. இந்த அளவை கூட்டினால் வீக்கம், கொழுப்பு அதிகரித்தல், ஹார்மோன் சமச்சீரின்மை உருவாகும். இதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், இளநீர் போன்றவை எடுத்து கொள்ளலாம். நம் உடலில் அதிக சர்க்கரை சேரும்போது பல் சொத்தை, உடல் பருமன் போன்ற பிரச்சனை வரும். காபி, கூல்ட்ரிங்ஸ் குடிக்கும்போது முதல் 30 நிமிடம் எனர்ஜி வந்தாலும் அடுத்து 'பழைய குருடி கதவ திறடி' கதைதான். ஆற்றல் முழுக்க குறைந்துவிடும்.
முடி உதிர்வு குறைய டிப்ஸ்
கஃபைன் அதிகம் எடுத்து கொண்டால் மன அழுத்தம், வரும். முடி உதிர்வும் அதிகமாகும். அவற்றை குறைக்க வேண்டும். தானியங்கள், பருப்பு வகைகள், வேர்க்கடலை, மொச்சை, கொண்டைக்கடலை, முட்டை, மீன் ஆகியவை உண்பது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். அனைத்து சத்துகளும் கலந்த உணவுகளை எப்போதும் உண்ணும்போது முடி வளர்ச்சி அபாரமாக இருக்கும். எல்லா நிறங்களிலும் இருக்கும் பழங்கள், காய்கறிகள், உணவு வகைகளை சேர்த்து சரிவிகித உணவாக எடுத்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான கூந்தலை இப்படித்தான் பெற முடியும்.
- முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால் நாள்தோறும் காலை, இரவு ஆகிய இருவேளையும் கரிசாலை பொடியை தேனில் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: அன்லிமிடெட் பலன்களை உடலுக்கு அள்ளித் தரும் அஸ்வகந்தா!