தீராத புற்றுநோயிலும் நம்பிக்கை இழக்காத பெண் போலீஸ்! தடகள போட்டியில் தங்கங்களை குவித்து சாதனை மேல் சாதனை

தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையிலும், நம்பிக்கை இழக்காமல் தடகளப் போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்களை குவித்து வருகிறார் தமிழக காவல்துறையில் ஏட்டாகப் பணிபுரியும் சேலம் அஸ்தம்பட்டியைச் சார்ந்த வனிதா. இவருக்கு காவல்துறை சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


 
ஓட்டப்பந்தயம், துப்பாக்கி சுடுதல், சங்கிலி குண்டு எறிதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டிலும் மாநில மற்றும் தேசிய அளவில் பங்குபெற்று இதுவரை 70 தங்கம், 50 வெள்ளி, 40 வெண்கலம் என,160க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து உள்ளார். இது தவிர்த்து சர்வதேச போட்டிகளிலும் கலந்துகொண்டு தங்கம் வென்று தமிழக காவல்துறைக்கே பெருமை சேர்த்த   வீராங்கனை என்று சொல்லலாம். இவருக்கு தற்போது 52 வயதாகிறது.திருமணம் செய்துகொள்ளாமல், தன் தாயுடன் வசித்து வருகிறார். 

இந்த ஒரு நிலையில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு எதிர்பாராதவிதமாக மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு மீண்டும் மூளையை தாக்கியது புற்றுநோய். தற்போது அதற்கான மருந்துகளை எடுத்து வருகிறார். மூளை புற்றுநோய் அதிகரித்து உள்ளதால், சிகிச்சை செய்யவும் மருத்துவர்கள் தயங்குகின்றனர். இந்த ஒரு நிலையில் திருச்சியில் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான மூன்று நாட்கள் நடைபெற்ற தடகள போட்டியில்  சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்ட வனிதா மூன்றாம் இடத்தையும் மும்முறை தாண்டுதல் போட்டியில்  இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.

மார்பக புற்றுநோய் அதனைத் தொடர்ந்து மூளை புற்றுநோயுடன் பல சிகிச்சைகள் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும் அனிதாவிற்கு தன்னம்பிக்கை சிறிதளவும் குறையாமல் ஆர்வமாக தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றார்.  இவருடைய தன்னம்பிக்கைக்கு காவல்துறைக்கும் பொதுமக்களும் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதே வேளையில் அவரின் உடல் நலம் விரைந்து குணமாக வேண்டும் என்றும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.