Asianet News TamilAsianet News Tamil

பட்டாசு வாங்கும் போது இதெல்லாம் கவனிச்சு வாங்குங்க..!!!

கையில் இருக்கும் காசை வைத்து எப்படி சந்தோஷமாக  தீபாவளியை கொண்டாடலாம் என்பது குறித்தும், அதேசமயத்தில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பட்டாசுகளை எப்படி தேர்ந்தெடுத்து வாங்கலாம் என்பது குறித்தும் தொடர்ந்து பார்க்கலாம்

Keep these things in mind while buying crackers
Author
First Published Oct 21, 2022, 11:18 PM IST

நம் கையில் காசு இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி. வேலை செய்யும் இடத்தில் போனஸ் போட்டாலும் சரி, போடாவிட்டாலும் சரி, அதுகுறித்து நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் எந்தவிதமான கவலையும் அடையமாட்டார்கள். அவர்களுக்கு எப்போதும் போல தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடியே தீர வேண்டும். அந்த நேரத்தில் நம்மில் பலரும் வெளியிடங்களில் கடனை வாங்கி வந்து தான் தீபாவளியை கொண்டாடுவோம். அந்த வகையில் எந்தவிதமான சங்கடமும் ஏற்படாமல், கையில் இருக்கும் காசை வைத்து எப்படி சந்தோஷமாக  தீபாவளியை கொண்டாடலாம் என்பது குறித்தும், அதேசமயத்தில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பட்டாசுகளை எப்படி தேர்ந்தெடுத்து வாங்கலாம் என்பது குறித்தும் தொடர்ந்து பார்க்கலாம்.

கிஃப்ட் பாக்ஸை தவிர்க்கவும்

நாம் கையில் வைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச காசும் கரைந்துப் போவதற்கு முக்கிய காரணம் இந்த கிஃப்ட் பாக்ஸ் தான். அனைத்து கிஃப்ட் பாக்ஸுகளிலும் இருக்கக்கூடிய பட்டாசுகள் குறித்து பெரிய பட்டியலே இருக்கும். ஆனால் பெட்டியை திறந்துப் பார்த்தால், அதனுடைய அளவு மிகவும் குறைவாக இருக்கும். நிறைய காசு  கொடுத்து வாங்கியும், பட்டாசுகளை ஆசை தீர வெடிக்க முடியாது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள், கிஃப்ட் பாக்ஸில் இருக்கும் பட்டாசுகள் நிறைய வெடிக்காமல் போய்விடுவதாகவும் கூறுகின்றனர்.

ஆட்களுக்கு தகுந்த மாதிரி பட்டாசு

நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்படிப்பட்ட வெடி வெடிப்பார்கள் என்று நமக்கே தெரிந்திருக்கும். அதற்கு ஏற்றவாறு பட்டாசுகளை வாங்கி தரலாம். இதனால் பெரியளவில் காசு மிச்சமாகும். முடிந்தவரை குழந்தைகளுக்கு புஸ்வானம், சங்குச் சக்கரம், கம்பு மத்தாப்பு போன்ற பட்டாசுகளை அதிகளவில் வாங்கித் தரலாம். ஒருவேளை ஆண் பிள்ளைகள் அதிகளவில் இருந்தால், ஆட்டம் பாம், குருவி வெடி போன்ற பட்டாசுகளை வாங்கித் தாருங்கள். முடிந்தவரை பட்டாசு கடைகளுக்கு செல்கையில் குழந்தைகளை உடன் கூட்டிச் செல்லாதீர். அதனால் கூடுதலாக செலவு தான் ஏற்படும்.

தீபாவளி 2022 : தீபாவளியன்று எண்ணெய் குளியல் ஏன்? எப்போது செய்ய வேண்டும்..

பட்டாசை சரிபார்த்து வாங்கவும்

நாம் பட்டாசுகளை வாங்கும் போது, அது நம்மூரில் தயாரிக்கப்பட்ட பட்டாசு தானா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். ஒருவேளை சீனப் பட்டாசு என்றால், அதை நாம் வாங்கக்கூடாது. ஒவ்வொரு பட்டாசின் அட்டைப் பெட்டியிலும், அது தயாரிக்கப்பட்ட இடம் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசு என்றால், அட்டைப் பெட்டியில் சீன மொழியில் எழுதப்பட்டு இருக்கும். சீனப் பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை, அதை நாம் பயன்படுத்தவே கூடாது, அதன்மூலம் வெளியாகும் புகையை சுவாசித்தால் உடலுக்கு ஆபத்தாக உடியும். இந்திய அரசும் சீன பட்டாசுகளை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி அன்று இந்த மந்திரங்களை சொல்லுங்கள்.. உங்கள் வாழ்க்கையில் இருள் நீங்கும்!

பசுமைப் பட்டாசுகளை வாங்குங்கள்

குறைந்தளவு மாசுபாட்டை ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிப்பதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் பெரியளவில் காற்று மாசு ஏற்படாது. பசுமைப் பட்டாசுக்களின் அட்டைப் பெட்டியில் CSIR - NEERI பசுமைப் பட்டாசுகள் என்று போடப்பட்டு இருக்கும். இதை நாட்டின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் தான் அறிமுகம் செய்துள்ளது. இதனால் நம்முடைய மூச்சுக்காற்று பாதிக்காது. எல்லாவிதமான வெடியும் பசுமைப் பட்டாசுகளில் கிடைக்கிறது. குறிப்பாக குழந்தைகள் வெடிப்பதற்கு பசுமைப் பட்டாசுகள் பாதுகாப்பானதாக இருக்கும்.

குழந்தைகளுக்கு பட்டாசுக்களை வாங்கித் தருவது மட்டுமின்றி, அதை பாதுகாப்பான முறையில் எப்படி வெடிக்க வேண்டும் என்பதை கற்றுத் தாருங்கள். அதேபோன்று அவர்கள் பட்டாசுகளை வைத்து வெடித்துக் கொண்டிருக்கும் போது நீளமான ஊதுவத்தியை பயன்படுத்த வேண்டும், காலில் எப்போதும் செருப்புப் போட்டுக்கொள்ள வேண்டும், அருகாமையில் ஒரு வாளி தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற விஷயங்களை சொல்லித் தந்திட வேண்டும். அப்போது தான் அவர்கள் தீபாவளியை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios