கருட புராணம் என்பது பதினெட்டு வடமொழி புராணங்களுள் ஒன்று. கருடன் கேட்கும் கேள்விகளுக்கு விஷ்ணு பதில் கூறும் பாங்கில் மனித வாழ்வில் நிறைந்துள்ள பல சூட்சுமமான விடயங்களுக்கு விளக்கங்களைத் தருகிறது கருட புராணம். கருட புராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தர்மம், தவம், சடங்குகள், மனிதனின் கருமங்களுக்குரிய பலன்கள், நரகம், சொர்க்கம், மறுபிறப்பு போன்ற பல விடயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன.

கருட புராணத்தில் பேசப்படும் மரணத்துக்குப் பின்னரான நிலையைப் பற்றியே இன்றைய பதிவில் நாம் காணப்போகின்றோம்.

மரணத்துக்குப் பின் அப்படி என்னதான் இருக்கிறது??? கருட புராணம் என்னதான் சொல்கிறது பார்ப்போமா???

பிறந்த ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும் என்பது மாற்ற முடியா விதி. ஆனால், இறந்த பின், சொர்க்கம், நரகம் போன்ற விடயங்கள் ஒரு சிலரால் ஏற்கப்படுகின்றன. பலரால் மறுக்கப்படுகின்றன. ஆனாலும் மரணத்துக்குப் பின் என்ன??? என்பது விடை காணப்படாத தொடர் தேடல் என்றே கூற வேண்டும். ஆனாலும் எம் முன்னோர் தமது அறிவு ஞானத்தின் காரணமாக மனித குலம் வாழ்வாங்கு வாழ எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றை செய்தல் பாவம், நாம் செய்யும் காரியத்துக்கு எத்தகு பலன் கிடைக்கும் என பல விடயங்களை மொழிந்துள்ளனர். அவ்வகையில் பல விடயங்கள் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளன. அதில் ஒரு அங்கமாகவே மரணத்துக்குப் பின் என்ன நிகழ்கின்றது எனப் பார்ப்போம்.
மனிதன் பிறந்து, வாழ்ந்து, திடீரென்று ஒரு நாள் மரித்துப் போகின்றான். மனித வாழ்க்கை மரணத்துடன் முடிந்து விடுகிறதா? மரணத்துக்குப் பின் வாழ்வுண்டா? இது எல்லோர் மனதிலும் எழும் வழக்கமான கேள்விதான். இதற்கு விடை கருட புராணத்தில் உண்டு. அதையே நாம் பார்க்கப் போகின்றோம்.

மனிதன் இறந்த பின் உடலை விட்டுப் பிரிந்த உயிர் வேறு உடலைப் பெறுகிறதா? அல்லது உடலில்லாமல் சுற்றித் திரிகிறதா? உடலில்லாவிட்டாலும் உருவம் உண்டா? இத்தகு கேள்விகளுக்கு விடை தேடிய ஆராய்ச்சி ஆளர்கள் மனிதன் இறந்த பின் உயிருக்கு உடல் இல்லாவிட்டாலும் உருவம் உள்ளது என்று கூறுகின்றார்கள்.
மரணத்துக்குப் பின் உயிருக்கு உருவம் உண்டு. உயிரோடு இருந்த காலத்தில் இருந்த உருவமே அதற்கு ஏற்படுகிறது. அதற்கும், உயிருள்ளவர்களைப் போன்று ஆசைகள், நிராசைகள், விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, துக்கம், ஆத்திரம், அமைதி, நல்லது, கெட்டது, பழிதீர்க்க வேண்டும் போன்ற குணங்கள் இருக்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கருட புராணம், இவ்வுலகை விட்டுச் செல்லும் ஜீவன் எமனது உலகுக்குள் நுழைவதற்கு முன்பு படும் துன்பங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. மரணம் ஏற்பட்ட பின், ஜீவன் யமலோகம் செல்கிறது. மனிதன் வாழும் பூமிக்கும் யமலோகத்துக்கும் உள்ள தூரம் எண்பத்தாறாயிரம் காதம் ஆகும். இங்கு யமதர்மன் இருப்பான். அவனுக்கு தூதுவர்களும் உண்டு. எமன் அஞ்சத்தக்க உருவத்தை உடையவன்.

தூதுவர்களும் அவ்வாறே இருப்பார்கள். அவர்கள் கறுப்பு நிற ஆடைகள் உடுத்தி இருப்பார்கள். முகத்தில் கோபக்கனலை உடையவர்களாக இருப்பார்கள். இந்த எமதூதர்கள் ஒருவனது ஆயுள் முடிந்தவுடன் அவனை சூட்சும உருவத்தில் எமன் முன்பு கொண்டு வந்து நிறுத்துவார்கள்.

எமன் தனது தூதர்களிடம், “இந்த ஜீவனை மீண்டும் அவன் இருந்த இடத்துக்கே கொண்டுபோய் விட்டு விட்டு வாருங்கள். இன்றிலிருந்து பன்னிரெண்டாம் நாள் முடிந்த பின்னர் மீண்டும் இங்கே கொண்டு வாருங்கள்” என்று கட்டளை இடுவான். தூதர்களும் மீண்டும் ஜீவனை அவனது உடலில் விட்டுவிட்டு வருவார்கள். இவ்வாறு ஜீவனை யமலோகம் சென்று, மீண்டும் திரும்ப வருவதால் இறந்த உடலை உடனே எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. எமதூதர்கள் ஜீவனை பாசத்தால் கட்டியிருப்பர். அதை அவிழ்த்து விட்டவுடன் சூட்சும உருவில் உள்ள அந்த உயிர், தன் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு அல்லது சுடுகாட்டுக்குச் செல்லும். தன் உடலுக்குள் புக முனையும். புக முடியாமல் தவிக்கும். தன் உடலுக்கு உற்றார் தீ வைக்கும் போது, சிதைக்குப் பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று ஓலமிட்டு அழும். அந்த ஜீவன் புண்ணிய ஆத்மாவாக இருந்தால், “இந்த உடல் எரிந்து சாம்பலாதல் நல்லது” என்று நினைத்து மகிழ்ச்சி அடையும்.
ஒரு ஜீவனின் உடலானது தலை முதல் கால் வரை தீயில் எரிந்து சாம்பலாதல் அவசியம்.

உடல் எரிந்து சாம்பலானவுடன் பற்றானது நீங்கிவிடும். அப்போது இறந்தவனுக்குப் பிண்டத்தால் ஆன சரீரம் உண்டாகும். இறந்தவனுக்குப் பத்து நாட்களும் பிண்டம் போட வேண்டும். இறந்தவனுடைய மகன் மேற்படி பிண்டம் போட தகுதி படைத்தவன். அந்த மகன் ஒவ்வொரு நாளும் போடும் பிண்டத்தால் ஜீவனுக்கு ஒவ்வொரு உடல் உறுப்புக்களும் வரிசையாக உண்டாகும்.

முதல் நாள் போடும் பிண்டத்தால் தலை உண்டாகும். இரண்டாம் நாள் போடும பிண்டத்தால் கழுத்தும், மூன்றாம் நாள் போடும் பிண்டத்தால் மார்பும், நான்காம் நாள் போடும் பிண்டத்தால் வயிறும், ஐந்தாம் நாள் போடும் பிண்டத்தால் உந்தியும், ஆறாம் நாள் போடும் பிண்டத்தால் பின்பாகமும், ஏழாம் நாள் போடும் பிண்டத்தால் குய்யமும் எட்டாம் நாள் போடும் பிண்டத்தால் தொடைகளும் ஒன்பதாம் நாள் போடும் பிண்டத்தால் கால்களும் பத்தாம் நாள் பிண்டத்தால் உடல் முழுவதும் உண்டாகும். இவ்வாறு பிண்டத்தாலான சரீரம் உண்டானாலும் ஜீவனால் பேச முடியாது.
பிண்ட உருவமான ஜீவன், வீட்டுக்கு வெளியே நின்று, வீட்டில் உள்ள தன்னைச் சேர்ந்தவர்களையும் வீட்டுக்கு வந்து போகும் சுற்றத்தாரையும் பார்த்து ஏங்கும். பசியாலும் தாகத்தாலும் அலறிக் கொண்டு இருக்கும். வருத்தத்துடன் செய்வதறியாது திகைத்து நிற்கும்.

பத்தாம், பதினொராம் நாள் தன்னுடைய புத்திரன் பிராண முகமாகக் கொடுக்கப்பட்டவற்றை உண்டு, பதின்மூன்றாம் நாளில் வரும் யமதூதர்களுடன் செல்லும். பாசத்தால் கட்டப்பெற்ற அந்த ஜீவன், யமதூதர்கள் தன்னை இழுத்துச் செல்லும் போது தனது வீட்டையும் சுற்றத்தாரையும் பார்த்துக் கொண்டே செல்லும். எமதூதர்களுடன் செல்லும் ஜீவன் பல இடையூறுகளைக் கடந்து செல்லும். இரவும் பகலும் பல இன்னல்களில் அமிழ்ந்து போகும். ஒரு நாளைக்கு இருநூற்று நாற்பத்தேழு காத வழி நடந்து செல்ல வேண்டும். வழியில் அடர்ந்த காடுகள் காணப்படும். அந்தக் காட்டில் உள்ள இலைகள் கூர்மையாக இருக்கும். பாதைகள் கரடுமுரடாக இருக்கும். பசியாலும் தாகத்தாலும் தவிக்கும் ஜீவன் காட்டைக் கடந்து செல்லச் சிரமப்படும். இவ்வாறு பல இன்னல்களைக் கடந்து செல்லும் போது, சுற்றத்தாரையும் கடந்த காலத்தையும் எண்ணிப் பார்க்கும். இனி யாரும் தனக்கு உதவ வரமாட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்ளும். தன் நிலையை எண்ணி பலவாறு புலம்பும்.
“ஐயோ! வாழும்காலத்தில் நான் யாருக்கும் எந்த தானமும் செய்யவில்லையே. பிறரை ஏமாற்றினேன். பெரியோரைப் பழித்தேன். உறவுகளை அவமதித்தேன். இறைவன்  இருப்பதையே மறந்தேன். நல்ல செயல் என்று எதையும் நான் செய்யவில்லை.” என ஜீவன் புலம்பும்.

ஜீவனது ஒவ்வொரு கூக்குரலுக்கும் எமதூதர்கள் துன்புறுத்துவார்கள். அடிப்பார்கள். கூரிய ஆயுதங்களால் குத்துவார்கள். அப்போது ஜீவன், “என்னைக் காக்க யாரும் இல்லையே என அழுது புலம்பும்.” ஜீவனை அழைத்துச் செல்லும் போது, எமகிங்கரர்கள் அவன் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டுவார்கள்.

“மடையனே! நீ பூவுலகில் வாழும் போது எந்த நல்ல காரியத்தையும் செய்ததுண்டா??? பிறர் பொருளை ஏமாற்றிப் பெற்றாய், தான தர்மம் ஏதும் செய்தாயா? ஆடம்பர வாழ்வு வாழ்ந்தாய். உன் மனைவி, மக்கள், சுற்றத்தாரை நம்பி இருந்தாய். இப்போது உனக்கு யார் துணை வருவார். எங்களிடம் நீ படும் பாடு எனது பாவச் செயல்களுக்கான தண்டனையே!” எனக் கூறி, பாசத்தாலும் முசலத்தாலும் அடிப்பார்கள்.
ஜீவன் செல்லும் பாதை

மரணித்த பின் ஜீவன் பல்வேறு இடங்களைத் தான் செய்த கர்மாக்கு ஏற்ப கடந்து செல்லும். ஜீவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தை அடைந்து அங்கிருந்து தொடர்ந்து செல்ல வேண்டும். சிறிது தூரம் காற்றின் வழியாகவும் சிறிது தூரம் புலிகள் நிறைந்த வழியிலும் யமதூதர்களுடன் சென்று ஓரிடத்தில் தங்கி இருக்க வேண்டும். இறந்தவரின் மகன் ஒவ்வொரு மாதமும் செய்யும் மாசிகம் காரணமாக ஒவ்வொரு பகுதியையும் வரிசையாக ஜீவன் கடக்க வேண்டும். இறந்த பின் ஜீவன், முப்பதாம் நாள் “யாமியம்” என்ற நரகத்தை அடையும். அங்கே பிரேதங்கள் (பிணம்) கூட்டம் கூட்டாகக் காணப்படும். அங்கு ‘புண்ணிய பத்திரை’ எனும் நதியுண்டு. ‘வடவிருட்சம்’ என்ற மரமும் உண்டு. சிறிது நேரம் ஜீவன் இங்கு இருக்கும்.

அதன் பின் இரண்டாவது மாசிகப் பிண்டத்தை உண்டு, காட்டின் வழியே செல்லும். அப்போது எமதூதர்கள் செய்யும் கொடுமைகளினால் ஜீவன் ஓலமிட்டுக் கொண்டே செல்லும். அதன் பின் மூன்றாம் மாசிகப் பிண்டத்தை உண்டு ‘சௌரி’ எனும் நரகத்தை அடையும். அங்கிருந்து செல்லும் போது கடுமையான குளிரால் ஜீவன் வருந்தும். அதன் பின் நான்காம் மாசிகப் பிண்டத்தை புசித்துவிட்டு ‘குரூரபுரம்’ என்ற பட்டணத்தை அடையும். அங்கு ஐந்தாம் மாசிகப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து ‘கிரெஞ்சன்’ என்ற நகரை அடையும். அங்கு ஆறாம் மாசிகப் பிண்டத்தை உண்பான். அங்கு சிறிது ஓய்வெடுத்துப் பின் ஒரு பயங்கரமான பாதையில் செல்ல வேண்டும். அப்போது ஜீவன் தனது பூலோக வாழ்வை எண்ணி வருந்தும்.எமதூதர்கள் மீண்டும் ஜீவனை நையப்புடைப்பார்கள். இதன் பிறகு ஜீவன், “வைதரணி” எனும் நதிக் கரையை அடையும். இந்நதி நூறு யோசனை நீளமுள்ளது. இது நீருள்ள நதியல்ல. இரத்தத்தாலும் சீழாலும் ஆன நதி. துர்நாற்றம் வீசும். அதில் பொடிய பிராணிகள் காணப்படும். இங்கு அஞ்சத்தக்க பயங்கர உருவம் கொண்ட பத்தாயிரம் படகோட்டிகள் ஜீவன் முன்பு தோன்றி, “ஜீவனே! நீ கோ தானம் பண்ணி இருக்கிறாயா?” எனக் கேட்டு, அவ்வாறு செய்திருப்பின் வைதரணி நதியைக் கடக்க நாங்கள் உதவுகின்றோம் எனக் கூறும். பசு தானம் செய்யாவிட்டால் ஜீவனை அந்த நதியில் தள்ளி துன்புறுத்துவார்கள். பசு தானம் செய்யாத ஜீவன் இந்நதிக் கரையில் நீண்ட காலம் தவிக்க வேண்டும். வைதரணி நதியைக் கடந்த பின், ஜீவன் விசித்திரன் என்பவனது நகரை அடையும்.

ஏழாம் மாசிகப் பிண்டத்தை உண்ணும் போது பிசாசுகள் தொல்லை ஏற்படும். நாம் பூமியில் வாழ்ந்த காலத்தில் பசி என்று வந்தவர்களுக்கு சோறு அளிக்காவிடின். ஏழாம் நாள் பிண்டத்தை பிசாசுகள் பறித்துண்ணும். இந்நிலையில் பிசாசுகள் பிடுங்கிச் சென்றது போக சிதறிக் கிடப்பவற்றை ஜீவன் உண்ணும். அதன் பின் ஜீவன், ‘பக்குவப் பதம்’ என்ற பட்டினத்தை அடையும். அங்கு எட்டாம் மாசிகப் பிண்டத்தை உண்ணும். பின்னர் ‘துக்கதம்’ என்ற ஊரை அடையும். அங்கு ஒன்பதாம் மாசிகப் பிண்டத்தை உண்ணும். அங்கிருந்து நடந்து சென்று ‘நாதக்கிராந்தம்’ என்ற நகரை அடையும். அங்கு பத்தாம் மாசிகப் பிண்டத்தை உண்ணும்.

பின்னர் ‘அதப்தம்’ எனும் ஊரை அடையும். அங்கு பதினொராம் மாசிகப் பிண்டத்தை உண்ணும். பின் ‘சீதாப்ரம்’ என்ற நகரை அடைய வேண்டும். பின்னர், பனிரண்டாம் மாத வருஷாப்திப் பிண்டத்தை உண்டு, ‘வைவஸ்தப் பட்டினம்’ என்ற நகரை அடையும். இதுவே யமபுரி. இது நூற்று நாற்பத்து நான்கு காத வழி அகலமுள்ளதாக இருக்கும். இங்கு கந்தர்வர்கள், அப்சரஸ்கள் இருப்பார்கள். இங்கு மேலும் பல்லாயிரக் கணக்கான பிராணிகளும் காணப்படும். ஜீவனின் பாவ புண்ணியங்களை அறிந்து எமதர்மனுக்குக் கூற பன்னிரு சிரவணர் இருப்பர். சித்திரகுப்தன் எமனிடம் ஜீவனின் விவரங்களை கூறுவான். எமன் அதைக் கேட்டு, அதற்கு ஏற்ப தமது கிங்கர்கள் மூலம் தண்டனை நிறைவேற்றுவான்.

எமபுரிக்கு வந்த ஜீவன், முன்பாக இருந்த பிண்ட சரீரம் நீங்கி, கட்டை விரல் அளவுள்ள ஒரு வடிவம் பெறும். அங்குள்ள ஒரு வன்னி மரத்தடியில் சிறிது காலம் தங்கி கர்மத்தால் ஆன சரீரம் பெறும். அந்நிலையிலே எமதூதர்கள் ஜீவனை எமபுரிக்கு அழைத்துச் செல்வார்கள். அவ்வாறு செல்லும் போது புண்ணியம் செய்த ஜீவன்களின் பார்வைக்கு யமபட்டனம் மிகவும் அழகாகத் தெரியும். எமன் முன் சென்றதும், ஜீவன் செய்த பாவத்துக்கு ஏற்ற தண்டனை பெற வேண்டும்.

ஒருவன் எந்த உறுப்பால் பாவங்கள் செய்தானோ, அந்த உறுப்பு மூலமாகவே அதற்கான தண்டனையை அடைய வேண்டும்.

எமபுரிக்குச் செல்லும் பாதை கரடுமுரடானது. துன்பம் நிறைந்தது. அந்தப் பாதையில் செல்லும் போது ஜீவன் படும் துன்பம் சொல்லி மாழாது. மரணத்துக்குப் பின் நாம் செல்லும் பாதையில் துன்பம் ஏற்படாது இருக்க தான தர்மங்களைச் செய் வேண்டும். எல்லாப் பிறவிகளை விடவுஞ் சிறந்தது மனிதப் பிறவியே. வாழும் காலத்தில் அறச் செயல்களை செய்து வாழ்தல் முறையாகும். இவற்றை இறந்த பின்னர் உணர்ந்து யாதொரு பயனும் இல்லை.