கார்த்திகை தீபத்திற்கு வீட்டில் எத்தனை விளக்குகள்,எங்கு ஏற்ற வேண்டும் தெரியுமா...? 

ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் குறிப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கு தீபத்திருநாளையொட்டி டிசம்பர் 1 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

பிறகு 4 ஆம் தேதி கற்பக விருட்சம் செய்யப்பட்டது. அதன் பின்பு 5 ஆம் தேதி- வெள்ளி ரிஷப வாகணம் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை 10 ஆம் தேதியான நாளை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஒவ்வொருவர் வீட்டிலும் மாலை நேரத்தில் தீப திருநாளையொட்டி, மாலையில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். விளக்கை ஏற்றும்போது வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதில் எப்போதுமே ஒரு விதமான சந்தேகம் இருக்கும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளக்கு ஏற்றுவார்கள். அந்த வகையில் வீட்டு முற்றத்தில் 4 விளக்கும், சமையல் கூடத்தில் ஒரு விளக்கும், நடையில் இரண்டு விளக்கும், பின்கட்டில் 4 விளக்கும், திண்ணையில் 4, மாட குழியில் இரண்டு, நிலைப்படிக்கு 2, சாமி படத்துக்கு கீழே இரண்டு, வெளியே யம தீபம் ஒன்று, திருக்கோலம் இடத்தில் - 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும்.

27 விளக்குகள் என்பது நட்சத்திரங்களை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 27 விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளில் சுவாமியை வழிபடுங்கள்.