கர்நாடக முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு..! 24 ஆம் தேதி முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு..! 

சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நடுவே தற்போது வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான மூன்று நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடி மற்றும் சூறை காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை நிலப்பரப்பில் அதிக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்றும் இதன் காரணமாக வருகிற 22-ஆம் தேதி அதாவது நாளை முதல் 24-ஆம் தேதி வரையில் உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்த வண்ணம் காணப்பட்டது.

ஆனால் சென்னையை பொருத்தவரையில், அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே இருந்தது. சென்னையில் மிதமான மழைக்கு கூட வாய்ப்பு இல்லாத சூழல் தொடர்ந்து நிலவி வருவதால்,  சென்னையில் வசிக்கும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. 

இதற்கிடைய தற்போது அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்ற செய்தி மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.அதே வேளையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதலே அதிக அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளியில் பயணம் செய்வதை மக்கள் தவிர்ப்பது நல்லது. 

குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் எங்கும் செல்லாதவாறு இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு வெளியில் செல்ல வேண்டி நேர்ந்தால் கையில் ஒரு வாட்டர் பாட்டில் மற்றும் குடையை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை என்பது கூடுதல் தகவல்.