Kaanum pongal 2023; கன்னிகள் வைக்கும் பொங்கல்! காணும் பொங்கலும் அதன் வழிபாடுகளும் முழு விளக்கம்!
Kaanum pongal rituals: காணும் பொங்கலை கன்னிப் பொங்கல், கணுப் பண்டிகை ஆகிய பெயர்களாலும் குறிப்பிடுவர். அதன் வழிபாடுகள் குறித்து இங்கு காணலாம்.
சமய வேறுபாடுகள் இல்லாமல் தமிழர்களாக இணையும் விழா தான் பொங்கல். இந்த பொங்கல் விழாவினை நான்கு நாள்களாக மக்கள் கொண்டாடுகின்றனர். அதில் காணும் பொங்கலும் ஒன்று. இதனை கன்னிப் பொங்கல், கணுப் பண்டிகை ஆகிய பெயர்களாலும் குறிப்பிடுவர். காணும் பொங்கல் என்றாலே குடும்பமாக வெளியூருக்கு சென்று கொண்டாடுவதுதான் என பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால் பொங்கலன்று சமைத்த உணவை உடன்பிறந்தோர் நன்மைக்காக காகம், குருவி போன்ற பறவைகளுக்கு அளிக்க வேண்டும் என்றொரு ஐதீகமும் உண்டு. இந்த படையலை ஆற்றங்கரையிலோ, வீட்டின் மாடியிலோ வாழை இலைகளிலோ வைத்து கொடுப்பது வழக்கம். ஐந்து வகையான சாதத்தை இலையில் வைக்க வேண்டுமாம்.
கன்னி பொங்கல்
காணும் பொங்கல் என்பது கன்னி பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்குமான நாள். அன்றைய தினம் மாலை வேளையில் திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் இந்த சடங்கை செய்வார்கள். ஒரு தாம்பூலத்தில் கரும்புத்துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் ஆகிய பொருள்களை வைத்து வெள்ளைத் துணியால் மூடியபடி கையில் எடுத்து சென்று ஓரிடத்தில் கூடுவார்கள். பின்னர் கும்மியடித்து பாடல்களை பாடியபடியே ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு நீர்நிலைகளுக்கு செல்வர். அங்கு கற்பூரம் ஒளிரவிட்டு இறைவனை வழிபடுவார்கள். திருமணம் கைகூட இந்த வழிபாடை செய்வார்களாம்.
கணுப்பிடி நோன்பு
கணுப்பிடி நோன்பை தங்களுடைய சகோதரர்கள் நலமாக வாழ பெண்கள் இந்த நோன்பை கடைபிடிப்பார்கள். இந்த வழிபாடு ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டின் மாடியிலோ தான் செய்ய வேண்டும். வண்ண கோலங்களும், இரண்டு வாழை இலைகளும் வழிபாட்டில் முக்கியம். இலைகளை கிழக்கு திசை நோக்கி வைக்க வேண்டும். இதில் ஐந்து வகை சாதங்களை படைக்க வேண்டும். இதை தொடர்ந்து சகோதரர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு தீபங்களை ஏற்றி ஆரத்தி கரைத்து ஆற்றில் விட்டு வழிபட வேண்டும்.
இதையும் படிங்க; Pongal recipe: பொங்கல் பண்டிகையில் செய்ய கூடிய செம்ம ருசியான கொத்தமல்லிப் பொங்கல்!
இப்படியும் காணும் பொங்கலை கொண்டாடலாம்!
காணும் பொங்கல் அன்று பெரியவர்களை சந்தித்து ஆசி பெற வேண்டும். உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து காணும் பொங்கலை கொண்டாடலாம். திருமணமான பெண்களுக்கு காணும் பொங்கல் ஒரு வரப்பிரசாதம். பொங்கல் பானையில் கட்டியுள்ள புதிய மஞ்சளை வயது மூத்தத் தீர்க்க சுமங்கலிகள் ஐவரின் கைகளில் கொடுத்து ஆசி பெற வேண்டும். இந்த மஞ்சளை கல்லில் உரசி முகம், பாதம் ஆகிய இடங்களில் பூசுவதும் காணும் பொங்கல் வழக்கம் என்கிறார்கள் பெரியவர்கள்.
இதையும் படிங்க; Pongal Recipes 2023: பொங்கல் பண்டிகைக்கு இந்த ரெண்டு ஸ்வீட்டையும் செஞ்சு அசத்திடுங்க!