இந்தப் பதிவில் லைம் நோய் குறித்து காணலாம்.
அமெரிக்க பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக், தன்னுடைய இசைப் பயணம் குறித்து சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதில் தான் லைம் நோய் பாதிப்புடன் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்நோயால் உடல் மற்றும் மன ரீதியாக பலவீனமாக உணர்வதாகவும் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு அவரது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் லைம் நோய் என்றால் என்ன? என்றும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவில் லைம் நோய் குறித்து காணலாம்.
எங்கு கண்டறியப்பட்டது?
அமெரிக்காவில் தான் லைம் நோய் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. பொரெலியா பர்க்டோர்பெரி, பொரெலியா மயோனி என்னும் பாக்டீரியாவால் முதலில் பரவியது. ஒருவருடைய உடலில் 3 முதல் 4 நாள்கள் இந்த பாக்டீரியா உயிருடன் இருந்தால் தான் இந்த நோய் வர வாய்ப்புள்ளது.
லைம் நோய்
பொரெலியா பர்க்டோர்பெரி என்ற பாக்டீரியாதான் லைம் நோயை உண்டாக்குகிறது. இவை கருப்பு கால்கள் கொண்ட உண்ணிகள் மனிதரைக் கடிக்கும்போது பரவுகிறது. இந்த லைம் நோய் சிறந்த பிரதியெடுப்பானாக செயல்படுகிறது. ஏனென்றால் இந்த நோய் தாக்கினால் பல நோய்களின் பாதிப்புகள் தோன்றும். அதாவது பல நோய்களை ஒத்த அறிகுறிகள் ஏற்படும். இந்தப் பாதிப்பு ஏதேனும் ஒரு உறுப்பை தாக்கும் என சொல்லிவிடமுடியாது. இதயம், மூளை, மத்திய நரம்பு மண்டலம், தசைகள், மூட்டுகள் என எந்த உறுப்பையும் பாதிக்கும் வீரியம் கொண்டது.
லைம் நோயின் மோசமான விளைவுகள்
பெரும்பாலும் குழந்தைகள், முதியோரை அதிகம் தாக்கும். ஆனால் அனைத்து தரப்பினருக்கும் வரக் கூடியது. இந்த நோய் தாக்கினால் நினைவாற்றல் பாதிப்பு ஏற்படும். கவனச் சிதறல், சொற்களை பேச, அறிந்து கொள்ள சிரமம் போன்றவை வரலாம். குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் இதயம், மூளை, நரம்பு மண்டலம் போன்றவற்றில் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். தவறான சிகிச்சை அளிக்கப்பட்டால் நிலைமை மோசமாகும். மூளைக் காய்ச்சல், மூளை வீக்கம், நரம்பு மண்டல பாதிப்பு, பொலிவிழந்த முகம், உணர்வின்மை போன்ற பல பாதிப்புகள் வரலாம். இந்நோய் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தினால் லைம் நியூரோபோரெலியோசிஸ் எனப்படுகிறது.
ஆரம்ப அறிகுறிகள்
சருமத்தில் தடிப்புகள், தலைவலி, சோர்வு, காய்ச்சல், குளிர், உடல் வலிகள், கழுத்து விறைப்பு, வீங்கிய நிணநீர் முனை ஆகியவை தொடக்கத்தில் ஏற்படும் அறிகுறிகளாகும்.
பிந்தைய அறிகுறிகள்
பயங்கரமான மூட்டு வலி, நரம்பியல் சம்பந்தமான பிரச்சினைகள், மேனி எங்கும் தடிப்புகள் பரவுதல், இதய கோளாறுகள், கண் அழற்சி, கல்லீரல் அழற்சி, உடல் பலவீனம் ஆகியவை பிந்தைய அறிகுறிகளாகும்.
எங்கு பரவ வாய்ப்பு அதிகம்?
திறந்தவெளி பகுதியில் இந்த நோய் பரவ அதிகம் வாய்ப்புள்ளது. அடந்த காடு, புல்வெளிகள் உண்ணிகள் இருப்பதற்கான ஏற்ற இடங்கள். கொசுக்களை போல இவை சருமத்தை தாக்கும் என்பதால் தோல் பகுதியை மூடி வைப்பது நல்லது. சரியான நேரத்தில் சிகிச்சை கொடுக்காவிட்டால் மூட்டு வீக்கம், முக வாதம், நரம்பியல் பிரச்சனைகள், அறிவாற்றலில் குறை, நினைவாற்றல் குறைதல், சீரற்ற இதயத் துடிப்பு வர வாய்ப்புள்ளது.
தடுக்கும் முறை
புல்வெளி, புதருக்கு மத்தியில் உண்ணித் தடையை ஏற்படுத்த வேண்டும். உருவாக்குங்கள். தோட்டத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக புதர் போன்ற செடிகள், கொடிகளில் தடுப்பு அமைப்புகளை அமைத்து சுத்தமாக வைக்க வேண்டும். வெறுங்காலுடன் வெளியில் செல்ல வேண்டாம். வெளியில் செல்லும்போது ஷூ கட்டாயம் அணிய வேண்டும். வீட்டில் பூச்சி விரட்டிகளை உபயோகம் செய்யுங்கள்.
