இந்தியாவின் நம்பர் ஒன் மொபைல் நெட்வொர்க் படுத்தும்பாடு!- கதறும் குமரி மக்கள்

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தனியார்த்துறையைச் சேர்ந்த பாரதி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ போன்ற முன்னணி நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பச் சேவையை வழங்குகின்றன. கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சேவையில் முதலிடத்தில் இருந்தது. 

அதன்பிறகு ஐடியா, வோடாபோன் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன. இவ்விரு நிறுவனங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வோடபோன் நிறுவனம் வாடிக்கையாளர்கள் அடிப்படையில் இந்தியாவின் நம்பர் ஒன் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக உயர்ந்தது. இதற்கிடையில் ஏர்செல் நிறுவனம் வணிகத்தில் நொடிந்து திவால் ஆனது. அதன் வாடிக்கையாளர்கள் ஏராளமானவர்கள் ஏர்டெல், வோடபோன் நிறுவன சேவைக்கு மாறினர். பிஎஸ்என்எல் நிறுவனமும் கணிசமான வாடிக்கையாளர்களைப் பெற்றது. செல்போன் டவர் பிரச்சினையாலேயே ஏர்செல் நிறுவனம் நொடிந்தது.

இந்திய தொலைத்தொடர்புச் சந்தையில் ஜியோ நிறுவனம் தலைதுாக்கிய பிறகு, மற்ற பிற சேவை நிறுவனங்களுக்கு டவர் பிரச்சினை உருவாவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக இது கிராமங்களைப் பதம் பார்க்கிறது. 

அந்தவகையில், கடந்த சில தினங்களாக குமரி மாவட்டத்தில் வோடாபோன் நிறுவனத்தின் சேவை முடங்கியுள்ளது. இன்கமிங் அழைப்புகள் வருவதேயில்லை. அவுட்கோயிங் அழைப்புகளுக்கு வாய்ப்பே இல்லை. இதனால் பிறரை தொடர்பு கொள்ள இயலாமல் தவிக்கின்றனர் குமரி மாவட்ட மக்கள்.

இதுகுறித்து புகார் எண் 198 க்குக் கூட தொடர்பு கொள்ள இயலவில்லை. எப்போதேனும் அந்த எண்ணுக்கு தொடர்பு கிடைத்தாலும் உரிய பதில் அவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை எனப் புலம்புகின்றனர் வோடபோன் வாடிக்கையாளர்கள்.