புதுக்கோட்டை மாவட்டம், நெம்மேலி பட்டியைச் சேர்ந்த காவல்துறை துணை ஆய்வாளர் அனுராதா வளர்த்து வந்த புகழ்பெற்ற ராவணன் ஜல்லிக்கட்டு காளை பாம்பு கடித்து மரணம் அடைந்தது அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அனுராதா, ராவணன் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார். கடந்தாண்டு அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளையர்களை திணறடித்து முதல் பரிசு பெற்ற காளை இந்த ராவணன். புதுக்கோட்டை மாவட்டம், நெம்மேலி பட்டியை சேர்ந்த அனுராதாவும், அவரது சகோதரர் மாரிமுத்துவும் சேர்ந்து ராவணன் காளையை மூன்று வருடங்களாக வளர்த்து வந்தனர். மலைநாடு வகையைச் சேர்ந்த இந்த காளையை அனுராதா பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்றதற்காக தஞ்சாவூரை சேர்ந்த நண்பர் ஒருவர் பரிசாக அளித்துள்ளார்.

 

தற்போது இந்த காளைக்கு ஒன்பது வயது ஆகிறது. ராவணன் காளை மாடு பிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தது. பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றது. கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் ராவணன் பங்கேற்றது. வீரர்களை திணறடித்து பிடிபடாமல் ஓடியது. அப்போதிருந்தே ராவணன் ஜல்லிக்கட்டு காளையை காணவில்லை. மாரிமுத்து உட்பட பலரும் கலையை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ராவணன் காலை தச்சன்குறிச்சி அருகே நிற்பதாக மாரிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மாரிமுத்து தச்சன்குறிச்சி சென்று காளையைத் தேடினார் அப்போது காட்டுப்பகுதியில் பாம்பு புற்றுக்கு அருகில் காலை இறந்த நிலையில் கிடந்தது. ராவணன் காளைபாம்பு கடித்து இறந்தது தெரியவந்தது. பாம்பு கடித்த ஆத்திரத்தில் பாம்பு புற்றையும் ராவணன் காளை முட்டி மோதி சேதப்படுத்துகிறது. பிறகு உடலில் விஷம் ஏறியதால் புற்று அருகிலேயே இறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராவணனை லாரியில் ஏற்றி ஊர்வலமாக தங்கள் சொந்த ஊரான நெம்மேலி பட்டிக்கு கொண்டு சென்றனர். 

 

ராவணன் காளையின் உடலைப் பார்த்து பலரும் கதறி அழுதனர். கிராம மக்கள் மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு வீரர்கள் ராவணன் காளை உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மனிதர்களுக்கு எப்படியும் ஈமச்சடங்கு நடக்குமோ அதே போன்று இறுதி சடங்கு நடத்தப்பட்டு ராவணன் காளை அடக்கம் செய்யப்பட்டது.