பெற்றோர் குழந்தைகள் முன்பு அழுவது சரியான அணுகுமுறையா? இதனை பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

குடும்பம் என்பது மனிதர்களாலானது மட்டுமல்ல. ஒரு வீட்டிற்குள் இருக்கும் உணர்வுகளின் வடிவம்தான் குடும்பம். உணர்ச்சிகளின் மிகுதியால் கண்ணீர் வருகிறது. அது சோகத்தினால் மட்டுமல்ல. சிரிப்பினாலும் கூட நிகழலாம். அதீத சோகமோ, அதீத மகிழ்ச்சியோ கண்ணீரை வரவழைக்கலாம். சிலர் கோபப்படும்போது கூட அழுவார்கள். ஆனால் குழந்தைகள் முன்பு சில விஷயங்களை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் அழுகையும் குறிப்பிட தகுந்த உணர்ச்சி தான். குழந்தைகள் முன்பு அழுவது அவர்களுடைய மனநிலையை எப்படி பாதிக்கும்? அவர்கள் முன்பு அழலாமா? இதைப் பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பெற்ற குழந்தைகள் முன்பு அழலாம். அதில் தவறு இல்லை. ஏனென்றால் அழுவதும் நமது உணர்ச்சிகளில் ஒன்று தான் என்பதை குழந்தைகள் உணர வேண்டும். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த குழந்தைகள் முன் அழுவதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்கும்போது பதில் சொல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய படுக்கை அறையில் அழுது கொண்டிருக்கலாம். திடீரென உங்களுடைய குழந்தை நீங்கள் அழுவதை கவனித்து, "அம்மா ஏன் அழறீங்க", " அப்பா நீங்க அழுதுட்டு இருக்கீங்களா?" எனக் கேட்கும் போது, சட்டென உங்களை நிதானப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு புரியும்வகையில் எளிய முறையில் பதில் சொல்ல வேண்டும்.

என்ன பதில் சொல்ல வேண்டும்?

சிலருக்கு குழந்தைகளிடம் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதே தெரியாது. இதனால் பதில் சொல்ல வேண்டிய நேரங்களில் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இது குழந்தைகளுடைய மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் அழும்போது உங்களுடைய குழந்தை ஏன்? என கேட்டால் அது உங்கள் மீதான அக்கறை என்பதை புரிந்து கொண்டு நிதானமாக பதில் சொல்ல வேண்டிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது.

"அம்மா/ அப்பாவுக்கு கொஞ்சம் மனசுல கஷ்டம். எல்லாருக்கும் இப்படி எப்பாவாது ஆகிறது இயல்புதான். சோகமா இருக்கப்ப அழுதுட்ட மனசு இலகுவா மாறிடும். அழுறது ஒன்னும் பலவீனம் இல்ல. எல்லோருக்கும் வாழ்க்கையில ஏதாவது ஒரு கணம் அழுதவங்கதான்" என்பது போன்ற நிதானமான பதில்களை சொல்ல வேண்டும்.

"சோகமா இருக்கப்ப அழுகை வர்றது சகஜம் தான். அப்பாவுக்கு வேலைல கொஞ்சம் டென்சன். அழுது முடிச்சுட்டா சோகம் போய் மனசு சந்தோஷமாகிடும். அப்பறம் அப்பா உன்கூட வந்து விளையாடுவேன்" என்றும் சொல்லலாம்.

இது மாதிரியான உரையாடல்கள் குழந்தைகள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்க்கும். அழுவதும், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதும் இயல்பானவை தான். அதை மறைக்க எதுவும் இல்லை என்று குழந்தைகளுக்கு புரியும்.

குழந்தைகளுக்கு கிடைக்கும் ஞானம்!!

பெற்றோர் அழுவதை குழந்தைகள் பார்க்கும் போது அவர்கள் என்னென்ன மாதிரியான விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதை இங்கு காண்போம்.

1). பெற்றோர் அழுவதை குழந்தைகள் பார்க்கும் போது, முதலில் அவர்களுக்கு பெரியவர்களும் அழுவார்கள் என்பது தெரியும். தன்னுடைய பெற்றோர் சோகமாய் இருப்பதையும், அழுவதையும் எந்த குழந்தையும் விரும்பமாட்டார்கள். பெற்றோரை ஆறுதல்படுத்த முயற்சி செய்வார்கள். இது அவர்களுக்குள் இருக்கும் பச்சாதாபத்தை வளர்கிறது.

2). சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு எல்லோரும் ஏதோ ஒரு தருணத்தில் சோகமாக இருப்பார்கள் என்பது புரியும்.

3). தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது சரியான அணுகுமுறை தான் என்பதை அவர்கள் புரிந்து நடந்து கொள்வார்கள்.

செய்யக்கூடாதது!

  • ஒருவேளை நீங்கள் சோகமாக இருப்பதற்கும் அழுவதற்கும் ஏதாவது விதத்தில் உங்களுடைய குழந்தை காரணம் எனக் கருதினால் அவர்களை குற்றஞ்சாட்டும் மனப்பான்மையோடு நடந்து கொள்ளாதீர்கள். அவர்களிடம் அதை வெளிப்படுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
  • உங்களுடைய உணர்ச்சிகளை குழந்தையின் மீது திணித்து அவர்களது சுமையை அதிகரிக்காதீர்கள். ஏனென்றால் உங்களுடைய அனுபவமும் பக்குவமும் அவர்களுடைய வயதில் அவர்களுக்கு இருப்பதில்லை.
  • நீங்கள் அழுவதை குழந்தைகள் பார்க்கும் போது அவர்கள் முன் போலியாக நடந்து கொள்ளாதீர்கள். நீங்கள் முழுவதும் நன்றாக இருப்பதாக அவர்களை ஏமாற்ற வேண்டாம். முடிந்தவரை சூழ்நிலையை எளிமையாக புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.
  • குழந்தைகள் பெற்றோரை பார்த்து வளர்பவர்கள். பெற்றோர் கோபத்தில் கட்டுப்பாடின்றி பொருள்களை போட்டு உடைப்பது, கத்துவது போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் இது குழந்தைகளைத் தவறாக வழிநடத்தக்கூடும். மனதளவில் அவர்களை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த விஷயங்களை கண்டிப்பாக பெற்றோர் தவிர்க்க வேண்டும்.