தாய்மொழி தினம்: உயிருக்கு நிகரான தமிழ் மொழியின் சிறப்புகள்.. தாய்மொழி கல்வி நன்மைகள் தெரியுமா?
International mother language day 2023: சர்வதேச தாய்மொழி தினமான இன்று தமிழ் மொழியின் தோற்றம், தனிச்சிறப்பு குறித்து அறியலாம்.
நாட்டின் கலாச்சார, மொழியியல் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் பிப்ரவரி 21ஆம் தேதி அன்று சர்வதேச தாய்மொழி தினம் (international mother language day 2023) கொண்டாடப்பட்டு வருகிறது. இது வங்கதேசத்தின் முயற்சியால் தான் சாத்தியமானது. 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோ பொதுமாநாடு இதற்கு ஒப்புதல் அளித்தது. ஒவ்வொரு இனக்குழுவுக்கு ஒரு தனி மொழி இருக்கும். அதற்கே உரிய சிறப்புகளும் உண்டு. இந்நாளில் தமிழ் மொழியின் தோற்றம் அதன் தனித்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தாய்மொழி..
நம் உணர்வுகளை மனதில் உதித்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்த நமக்கு உதவும் கருவிதான் தாய்மொழி. இந்த மொழி ஒரு மனிதனின் பால்ய காலம் முதல் அவனுடைய நாவில் பழக்கப்படத் தொடங்கியிருக்கும். செந்தமிழும் நாபழக்கம் என்பது தற்போது நினைவுக்கு வருகிறதா?
தமிழ் மொழி சிறப்பு
சுமார் 2 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாறு கொண்டது தமிழ்மொழி. இப்படியான பழமையான மரபை சில மொழிகளே கொண்டுள்ளன. கிரேக்க மொழி இந்த சிறப்பை தாங்கி நின்றாலும், அதன் பழமையான இலக்கியத்தை அவர்களால் எளிமையாக இப்போது புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் தமிழை எடுத்து கொண்டால் 2 ஆயிரம் ஆண்டு பழமையான உலக பொதுமறை திருக்குறள் நம்மிடம் இன்றளவும் உள்ளது.
திருக்குறளில் பயின்று வரும் சொற்கள் இப்போது பேச்சு வழக்கிலும் கூட இருப்பது நம் மொழி மரபின் அடையாளங்களை பறைசாற்றுகிறது. சீனத்தின் மாண்டரின் மொழி, அரபு உள்ளிட்ட தொன்மையான மொழிகளில் கூட மரபு தொடர்ச்சியில் இடைவெளி உண்டு. ஆனால் தமிழ் அப்படியில்லை.
தமிழ் மொழியின் வரலாறு
தமிழ்க்குடிக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அதனுடைய தொன்மையும், தொடர்ச்சியும் அதன் தாய்மொழியான தமிழில் தாம் பொதிந்து கிடக்கிறது. ஹராப்பா, மொகஞ்சாதரோ ஆகிய நாகரிகத்தின் தொன்மையை அறியும் அகழ்வாய்வில் கிடைத்த புதைபொருட்களில் இடம்பெற்றுள்ள சில உருவ எழுத்துகளில் தமிழும் உள்ளது. இப்படி சான்று அடிப்படையில் கண்டால் தமிழ் எழுத்துமொழி 3 ஆயிரம் ஆண்டுகள் கூட பழைமையாக இருக்கும் என அறிஞர்கள் கூறுகின்றனர். கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற திராவிட மொழிக்குடும்பத்தின் தாயாக கருதப்படுவது கூட நம் தமிழ்தான் என்றால் எவ்வளவு பெருமை நமக்கு...பண்டைகால தமிழ் மன்னர்கள் 3 சங்கங்களை அமைத்தனர். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் தான் அவை. இதன் மூலம் பல இலக்கியங்கள் இயற்றப்பட்டன.
இதையும் படிங்க: மாசி மகம் 2023: எப்போது, யாருக்கு விரதமிருந்து வழிபட்டால் ஏழு ஜென்ம பாவமும் விலகும்.. விரத பலன்கள் முழுவிவரம்
தாய்மொழி கல்வியின் அவசியம்...
உலகளவில் சுமார் 40% மக்கள், தாங்கள் பேசும் அல்லது புரிந்துகொள்ளும் மொழியில் கல்வியைப் பெறவில்லை என யுனெஸ்கோ தெரிவிக்கிறது. ஒரு மனிதனின் அறிவின் வளர்ச்சி என்பது அவனுடைய தாய்மொழியால் தான் சாத்தியப்படும். சிந்தனையை செழுமைப்படுத்த தாய்மொழிக்கு ஆற்றல் மட்டுமே உண்டு. மக்களால் அதிகம் பேசப்படாத மொழிக்கு ஆயுள் குறைவு. ஒரு நாட்டை அழிக்க நினைத்தால் அவர்களுடைய பண்பாடு, மொழியில் பாய்ச்சல் நிகழ்த்தினால் போதும் என்பார்கள். சோகம் என்னவெனில் உலகில் 2 வாரங்களுக்கு ஒரு மொழி வழக்கிழந்து போவதாக கூறப்படுகிறது. மனித நாகரிகத்தில் மாற்றம், வளர்ச்சியை உருவாக்குவதில் மொழிக்கு இன்றியமையாத பங்கு உள்ளது. அதை வலியுறுத்தவே தாய்மொழி தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது.
இன்று தமிழ்நாட்டில் மொழி கலப்பு பரவலாக காணப்படுகிறது. 10 வார்த்தைகளில் 7 வார்த்தை நம்மை அறியாமலே ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி கலப்பில் பேசிவருகிறோம். இது மாற வேண்டும். தமிழில் எழுத, பேச தயங்கக் கூடாது. குழந்தைகளுக்கு நல்ல தமிழ் கதைகளை சொல்லிக் கொடுக்க கூட பெற்றோருக்கு நேரம் இருப்பதில்லை. நம் மொழியின் வரலாறை, தமிழ் இலக்கியங்களின் சிறப்பை அவ்வப்போது கற்று கொடுங்கள். தமிழ் புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். வளரும் தலைமுறைக்கு தாய்மொழியான தமிழ் மொழியின் முக்கியத்துவம் தெரிவது அவசியம். சர்வதேச தாய்மொழி தின வாழ்த்துகள்!
இதையும் படிங்க: சாமி ஆடுறவங்க சொல்லும் அருள் வாக்கு நிஜமா பலிக்குமா? அது உண்மையா? பின்னணி என்ன?