வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் வேட்பாளர்கள் பிரச்சார உரையில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தேர்தல் அறிக்கையில் எந்தெந்த அறிக்கை கொடுத்தால் மக்கள் மனதில் இடம் பிடித்து வாக்குகளை அள்ள முடியும் என்பதில் மிகவும் கவனமாக ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி வரை செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஒரு வித்தியாசமான வாக்குறுதியை கொடுத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் "மனைவியை எதிர்ப்போர் சங்கம்" என்ற சங்கத்தை தொடங்கி நடத்தி வருபவர் தான் தசரத் தேவ்தா. இவருடைய சங்கத்தில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத் கிழக்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நின்று, வரும் தேர்தலை சந்திக்க உள்ளார். ஒவ்வொரு கட்சியும் வித்தியாசமான, மக்களுக்கு தேவையான தேர்தல் அறிக்கை அறிவித்து வரும் நிலையில் இவர் மட்டும் மனைவியாலும் மனைவியின் உறவினர்களாலும்  பாதிக்கப்படும் கணவர்களின் நலனை பாதுகாப்பதே தன்னுடைய நோக்கம் என்றும், அதுவே தன்னுடைய தேர்தல் அறிக்கை என்றும் கூறி மக்களிடத்தில் ஓட்டு கேட்டு வருகிறார்.

மேலும் அவ்வாறு பாதிக்கப்படும் கணவன்மார்களுக்கு சட்டப்பிரிவு 498 படி உதவி செய்ய உள்ளதாகவும், ஒருவேளை இந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆனால் நாடாளுமன்றத்தில் கணவன்மார்களுக்கு குரல் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து வருகிறார். இவர் ஏற்கனவே 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதைய நிலவரப்படி இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றவர் தேவ்தா. இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதால் குஜராத் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளரான இவரின் தேர்தல் வாக்குறுதி பற்றிய பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.