இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 72,330 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபருக்கு பின் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில்  72,330 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,21,665 ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 459 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,62,927 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,14,74,683 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 40,382 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 5,84,055 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 6,51,17,896 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.