இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தினசரி பாதிப்புகள் 50 ஆயிரத்தை கடந்ததுடன், உயிரிழப்பும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்;- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,46,652 ஆக உயர்ந்துள்ளது. 32,987 பேர் குணமடைந்ததால், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,12,64,637 ஆகவும் உயர்ந்துள்ளது.

தற்போது 4,21,066 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,60,949 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும்11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதனால், இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 23.86 கோடியை தொட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று வரை 5,55,04,440 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.