40 வருடங்களுக்கு ஒருமுறை 48 நாட்கள் காட்சியருளும் காஞ்சிபுரம் ஶ்ரீஆதி அத்திவரதர் வைபவ தரிசனம், பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை இந்த தரிசனம் நடைபெறுகிறது. இதற்காக வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வருகை தருகின்றனர். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள ஓட்டல்கள், மற்றும் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகளிலும், ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

சுமார் 5 கி.மீ தொலைவில் இருந்து, காலை 5 மணி முதலே அத்திவரதரை தரிசிக்கக் கூட்டம் அலைமோதுகிறது. நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் பேர் தரிசனம் செய்து வருகின்றனர்.. கடந்த 9 நாட்களில், சுமார் 10 லட்சத்து 20ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அத்திவரதரை வழிபடுவதற்கான நேரம் காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நாளை ஒருநாள் மட்டும் ஆனி கருட சேவையை முன்னிட்டு மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை வரதராஜ பெருமாள் கருட சேவை நடைபெறும் என்பதால் அத்திவரதர் தரிசனத்தையும், வரதராஜ பெருமாள் தரிசனத்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது. எனவே 5 மணியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும், 23 ஆம் தேதி பிரதமர் மோடியும் அத்திவரதரை காண  காஞ்சிபும் வருகைதர உள்ளனர்.இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.