கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்து சென்னையில் வசித்த மக்கள் தங்கள் சொந்த ஊரைத் தேடி சென்றுவிட்டதால், நகரில் எங்கு பார்த்தலும் ‘டூ-லெட்’பதாகைகள் நீக்கமற நிறைந்து வருகின்றன.

சென்னையில் மட்டும் 84 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் கட்டிடங்கள் கட்டும் பணி, ஓட்டல் பணி, அழகு நிலையங்கள் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநில கூலித் தொழிலாளிகள் பெரும்பாலானோர் சிறப்பு ரெயில்கள் மூலம் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்று விட்டனர். இதே போன்று, சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தவர்களில் பலர் வேலை இழந்து சொந்த ஊரைத் தேடி பயணம் மேற்கொண்டு விட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தவர்கள் பலர் தினசரி தங்கள் சொந்த ஊரை தேடி சென்று கொண்டு இருக்கின்றனர். பலர் வாடகை மற்றும் ஒத்தி வீடுகளில் இருந்து தங்களது கட்டில், பீரோக்கள், மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு லாரிகள் மூலமாகவும் சொந்த ஊரை நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.

தற்போது, ‘இ-பாஸ்’பெற முடியாமல் பலர் சொந்த ஊருக்கு பயணம் செய்ய வழி தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்டம் விட்டு மாவட்டங்கள் செல்ல ‘இ-பாஸ்’தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டால், சொந்த ஊர்நோக்கி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். சொந்த ஊர்களை நோக்கி பயணம் செய்தவர்களால் அவர்கள் குடியிருந்து வந்த வீடுகள் தற்போது காலியாக கிடக்கின்றன.

இந்த வீடுகளின் முன் வாடகைக்கு என்கிற பதாகைகள் தொங்கிய படி உள்ளன. முன்பு, சென்னையில் குடியேறுவதற்கு வீடு தேடி குறைந்தது ஒரு மாதமாவது அலைந்து திரிந்தால் தான் வீடுகளை வாடகைக்கு பெற முடியும். ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும் ‘டூ-லெட்’பதாகைகள் தொங்குகின்றன. ஆனால், வீடுகளில் குடியேற யாரும் வந்தபாடு இல்லை என்கிறார் வீட்டு உரிமையாளர் ஒருவர்.