இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 5 விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். கரண்ட் பில் அதிகமாக வராது. பணமும் மிச்சமாகும்.
கோடையில் ஏசி, ஏர் கூலர் பயன்பாடு, மழைக்காலத்தில் ரூம் ஹீட்டர், வெந்நீர் காரணமாக கரண்டு பில் அதிகமாக வரும். இது இயல்பானது தான். ஆனால் சிலரது வீடுகளில் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தாவிட்டாலும் கரண்ட் பில் மட்டும் அதிகமாக வந்துவிடும். எதனால இப்படி வருகிறது என்று பலரும் குழம்பி போய் இருப்பார்கள். நீங்களும் இப்படித்தான் குழம்பி இருக்கீங்களா? இதற்கு நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாங்க, அதுதான் உண்மை. ஆனாலும் அதிகமாக இருக்கும் மின் கட்டணத்தை பாதியாக குறைக்க கீழே சொல்லப்பட்டுள்ள சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மின் கட்டணம் அதிகமாக வருவதை தடுக்க சில வழிகள் :
1. எல். இ.டி. பல்பு பயன்படுத்துங்கள் :
நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் பல்புகளுக்கு பதிலாக, எல். இ.டி. பல்பு பயன்படுத்த ஆரம்பிங்கள். இது மற்ற பல்புகளை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் குறைவான மின்சார பயன்பாட்டை தான் கொண்டுள்ளது. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 80 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம். எனவே இனி இதுபோன்ற எல்.இ.டி பல்புகளை பயன்படுத்தி கரண்ட் பில் அதிகமாக வருவதை தடுக்கலாம். பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.
2. ஏ.சியை இப்படி யூஸ் பண்ணுங்க :
தற்போது பெரும்பாலானோர் வீட்டில் ஏசி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதை சரியான முறையில் அறிந்து யாரும் பயன்படுத்துவதில்லை. இதன் காரணமாக கரண்ட் பில் தான் பல மடங்கு அதிகமாக வருகிறது. எனவே கரண்ட் பில் பாதியாக வர ஏசியை 24 டிகிரி வைத்து பயன்படுத்துங்கள். இதனால் மின்சார பயன்பாடானது 6-8 சதவிகிதம்பரை குறையும். அதுபோல ஏசியை பயன்படுத்தும் போது சீலிங் ஃபேனையும் பயன்படுத்தினால் அரை முழுவதும் குளிர்ந்த காற்று பரவும்.
3. சரியான மின்சாதன பொருட்கள் :
உங்கள் வீட்டிற்கு நீங்கள் ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு பொருட்களை வாங்கும் போது அதில் BEE (bureau of energy efficiency) என்ற தர குறியீட்டில் 5 நட்சத்திரம் ரேட்டிங் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். இவை விலை அதிகமாக இருந்தாலும் மின்சார பயன்பாடு குறைவாக தான் இருக்கும். இதனால் உங்கள் வீட்டு மின் கட்டணத்தை கணிசமாக குறைக்கலாம்.
4. சூரிய ஒளி பயன்பாடு
சில வீடுகளில் பகல் நேரத்தில் கூட வெளிச்சத்திற்காக டியூப் லைட் போடுவார்கள். அவற்றின் தொடர்ச்சியான பயன்பாட்டால் கரண்ட் பில் தான் அதிகமாக வரும். ஆகவே பகலில் வீட்டின் ஜன்னல்கள், கதவுகளை சிறிது நேரம் திறந்து வையுங்கள். இதனால் போதிய அளவுக்கு சூரிய ஒளி வீட்டிற்குள் வரும். வீடும் வெளிச்சமாக இருக்கும். இந்த வழியில் உங்களது பணத்தை மிச்சப்படுத்தலாம்.
5. சோலார் முறை :
உங்களது வீட்டில் கரண்ட் பில் அதிகமாக வருவதை தடுக்க சூரிய ஒளி ஆற்றலில் இயங்கக்கூடிய சோலார் பேனல்களை வாங்கி அமைக்கலாம். இதன் விலை அதிகமாக இருந்தாலும் பல ஆண்டுகள் இது உங்களுக்கு லாபம் தரும்.
மேலே சொல்லப்பட்டுள்ள ஐந்து வழிமுறைகளை நீங்கள் பின்பற்றி வந்தால் உங்கள் வீட்டில் கரண்ட் பில் அதிகமாக வராது. பணமும் வீணாக செலவழியாமல் மிச்சமாகும்.
