மழைக்காலத்தில் உங்கள் பட்டுப் புடவைகளில் பூஞ்சைகள் வராமல் அதை பாதுகாப்பது எப்படி என்று இங்கு காணலாம்.

மழைக்காலம் வந்துவிட்டாலே வீட்டில் இருக்கும் பீரோவில் விலையுயர்ந்த பட்டுப் புடவைகளுக்கு கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். ஏனெனில் மழை காலத்தில் பட்டுப்புடவைகளில் பூஞ்சைகள் வளர்ச்சி, பூச்சித்தொல்லை, ஒரு விதமான நாற்றம், புடவையின் நிறை மாறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும். மழைக்காலத்தில் பட்டுப் புடவைகளில் எந்தவித சேதமும் ஏற்படாது. இந்த பதிவில் அது குறித்து பார்க்கலாம்.

மழைக்காலத்தில் பட்டுப்புடவைகளை பராமரிப்பது எப்படி?

அலமாரியில் ஈரம் இருக்க கூடாது!

அலமாரியில் ஈரப்பதம் இருந்தால் பட்டுப் புடவை நாஸ்தியாகிவிடும். ஈரம் உள்ள இடத்தில் பூஞ்சை வளர்ச்சி வேகமாகவே இருக்கும். இதனால் புடவையின் நூல் இழைகள் பலவீனமடைந்து சேதமடைந்து விடும். எனவே பட்டுப் புடவை வைத்திருக்கும் அலமாரியை எப்போதுமே உலர்வாக வைத்திருக்கவும்.

ஈரப்பதத்தை உறிஞ்சும் பொருட்கள் :

பட்டுப்புடவை வைத்திருக்கும் அலமாரியில் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு என சில இயற்கை பொருட்கள் உள்ளன. உதாரணமாக வேப்ப இலைகள், உலர்ந்த லாவண்டர் மலர்கள், கற்பூரம், சிலிக்கான் ஜெல் பை ஆகியவற்றை அலமாரியில் வைக்கலாம். இவை புடவையை பூஞ்சைகளிடம் இருந்து பாதுகாக்கும். ஆனால் இந்த பொருட்களை ஒவ்வொரு மாதமும் மாற்றி விட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

புடவையை பிளாஸ்டிக் பையில் வைக்காதே!

பட்டு புடவைகளை பலர் காற்று நுழையாத பிளாஸ்டிக் பைகளில் வைப்பார்கள். ஆனால், பிளாஸ்டிக் பையானது ஈரப்பதத்தை உள்ளே தக்க வைத்துக் கொள்ளும். இதனால் பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்று சூழலாக அது மாறிவிடும். ஆகையால் மறந்தும் கூட பட்டுப் புடவைகளை காற்று நுழையாத பிளாஸ்டிக் பைகளில் வைத்து விடாதீர்கள்.

ஹேங்கரில் தொங்கவிடுங்கள்!

நீங்கள் உங்களது பட்டுப்புடவைகளை ஹேங்கரில் தொங்கவிட விரும்பினால் மரத்தாலான ஹேங்கரை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் இதுதான் புடவையில் அழுத்தத்தை கொடுத்து சுருக்கங்கள் விழுவதை தடுக்கும். மேலும் அதன் வடிவத்தையும் மாற்றாது. எக்காரணம் கொண்டும் இரும்புஹங்கர் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது துருப்பிடித்து புடவையில் விடாப்பிடியான கறையை ஏற்படுத்தி விடும்.

குறைவான வெளிச்சத்தில் வை :

சூரிய வெளிச்சம் அல்லது அதிகப்படியான வெளிச்சம் இருக்கும் இடத்தில் பட்டு புடவையை வைக்க வேண்டாம். ஏனெனில் அது புடவையின் நிறத்தை மங்க செய்திடும். எனவே பட்டுப்புடவைகளை எப்போதுமே சுத்தமான, இருட்டான மற்றும் பூச்சிகள் இல்லாத மர அலமாரியில் அடுக்கி வையுங்கள்.

பட்டுப்புடவைகளை மடித்து வைக்கும் சரியான முறை :

பட்டுப்புடவைகளை நீங்கள் ஒரே மடிப்பில் நீண்ட காலமாக வைத்திருப்பது நல்லதல்ல. எனவே ஒவ்வொரு மாதமும் பட்டுப் புடவைகளை எடுத்து உதறி, பிறகு அதை வேறு மடிப்பில் மடித்து வைக்கவும். இப்படி நீங்கள் செய்தால் புடவையில் சுருக்கங்கள் விழாது. புடவையில் இருக்கும் ஈரப்பதமும் வெளியேறும்.

மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றினால் மழைக்காலத்தில் உங்களது விலையுயர்ந்த பட்டுப் புடவைகளை பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.