Asianet News TamilAsianet News Tamil

Pongal Special : பொங்கலோ பொங்கல்...தித்திக்கும் தை திருநாளின் வரலாறு தெரிந்து கொள்ள விருப்பமா?

தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் பொங்கல் திருநாளின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம்.

History of pongal festival
Author
Chennai Central, First Published Jan 13, 2022, 7:34 AM IST

தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் பொங்கல் திருநாள். இந்த தை திருநாளில் விதைத்த நெற்பயிரை அறுவடை செய்து பயன்பெறுவதுடன், வேளாண் தொழிலில், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்வார். பொங்கல் விழா போகி பொங்கல், சூரிய பொங்கல்,  மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாள் என்றவுடன் நம் அனைவருக்கும் தெரிந்தது, போகி, கரும்பு, ஜல்லிக்கட்டு, பொங்கல், கும்மி, மஞ்சுவிரட்டு, ஆனால், இவற்றின் வரலாறு பற்றி தெரியுமா? இவை ஏன் கொண்டாடப்படுகிறது என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.
 
பொங்கல் பண்டிகை சங்க காலத்தில் இருந்து கொண்டாப்பட்டு வருகிறது.சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

பொதுவாக ஜனவரி 14 அன்று வரும், தமிழ் சூரிய நாட்காட்டியின்படி தை மாதத்தின் தொடக்கத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் வீடுகளுக்கு சுத்தம் செய்து, புது வர்ணம் பூசி, அரிசி கோலங்களால் வீடுகளை அலங்கரிப்பார்கள். பொங்கல் ஆறு மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கி நகர்வதைக் குறிக்கிறது. சூரியனின் தெற்கு இயக்கத்திற்கு மாறாக இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

History of pongal festival

புராணத்தின் படி பொங்கல் பண்டிகை வரலாறு:
 
சிவபெருமான் ஒருமுறை தனது காளையான பசவாவை பூமியில் இறங்கி மக்களை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடச் சொன்னார், தினமும் எண்ணெய் மசாஜ் செய்து குளிக்கச் சொன்னார். ஆனால், பசவா தவறுதலாக, அனைவரும் மாதத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளித்து, தினமும் சாப்பிட வேண்டும் என்று அறிவித்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பசவத்தை பூமியில் என்றென்றும் வாழும்படி சபித்தார். பூமியில், பசவா மக்களுக்கு அதிக உணவை உற்பத்தி செய்ய உதவ வேண்டும் என்று பணிக்கப்பட்டது. இதுவே இன்று வரை கால்நடைகள் விவசாயத்துக்கு  பயன்படுவதற்கு காரணம் என புராணம் கூறுகிறது.

பொங்கல் திருவிழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.   

முதல் நாள் போகிப் பண்டிகை:

பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.  இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

சூரிய பொங்கல்:

History of pongal festival

பொங்கலன்று அதிகாலை எழுந்து வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். கோலமிட்ட இடத்தில் தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்'' என்று உரக்கக் கூவுவர். தனது முதற்பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே,  தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது.
 
கரும்பு:

தின்னத் தின்னத் திகட்டாத இனிப்பு பொங்கலுக்கு சிறப்பு கரும்பு பொறுமையாய் சாப்பிட விரும்பு சர்க்கரை வெல்லம் தரும் கரும்பு என்று மண்ணிற்கு சிறப்பு சேர்க்கும் பயிராக இனிப்பு சுவையையும் குளிர்ச்சி தன்மையையும் கொண்ட கரும்பு மருத்துவ குணமிக்கது. அதன் பிறப்பிடம் தென் பசுபிக் தீவுகளாக இருந்தாலும், தமிழ் பாரம்பரியத்தில் ஒன்றுவிட்ட பயிராக இருந்து வருகிறது.

கரும்பு என்றால் இனிப்பு இன்பம் என்று தமிழர்கள் கருதியதால் தான் தித்திக்கும் பொங்கலுக்கு மேலும் தித்திப்பை கூட்ட செங்கரும்பும் சேர்த்துள்ளனர். களர் நிலத்தில் போட்டாலும் உழைப்பின் ஒய்யாரமாய் கட்டுக்கட்டாய் விளைந்து நல்ல மகசூலைக் கொடுத்து விவசாயிகளின் மகிழ்ச்சிக்கு வாழ்த்தும் பயிர் கரும்பாகும்.  

History of pongal festival

மாட்டுப் பொங்கல்:

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும். மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவித்து, பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு  வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்குத் தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
  
இறுதியாக காணும் பொங்கல் அன்று, மக்கள் தங்கள் சொந்தங்களுடன் ஒன்றுகூடி ஒன்றாக உணவருந்தி கொண்டாடு கிறார்கள். இந்த பொங்கல் உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் சேர்க்க வாழ்த்துக்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios