இடி, மின்னல், சூறை காற்றுடன் மழை..!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் தெற்கு பகுதி முதல் குமரி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதி வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதாகவும் அதே சமயத்தில் தென் தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தர்மபுரி, நாமக்கல், சேலம், விருதுநகர், கரூர், திருப்பூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் நேற்று தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரி பாரான்ஹூட் பதிவாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக திருத்தணி மதுரை ஆகிய இடங்களில் 106 டிகிரியும், சென்னையில் குறைந்தபட்சமாக 100 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் சென்னையில் மழையை பொருத்தவரையில் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என்றே கூறலாம். இதற்கிடையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் ஒரு பக்கம் அவதியும் இன்னொரு பக்கம் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது