கோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் வழங்கிய நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோயமுத்தூர் தொட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடை, கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மூலிகை மைசூர்பா உண்பதன் மூலம் குணமடைய முடியும் என்ற நோட்டீஸ் ஒன்றை அச்சடித்து அப்பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்த நோட்டீசில் ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசயம், இது சின்னியம்பாளையம் மற்றும் வெள்ளலூரில் நிறைவேறி உள்ளது. கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிற்கு தேடிச்சென்று இலவசமாக வழங்கவும் தயாராக உள்ளோம், மத்திய அரசு விரும்பினால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் இந்த பார்முலாவை எவ்வித பணம் பொருள் எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக தர தயாராக உள்ளோம், 2020இல் இந்தியா வல்லரசாகும் என்ற மேதகு ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களது கனவு நிறைவேற மற்றும் இறந்த அவரது ஆத்மா சாந்தி அடைய துணை நிற்போம் என்ற வாசகங்கள் அடங்கி உள்ளது.தற்பொழுது அந்த நோட்டீஸானது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்கள் குழு போராடும் நிலையில் இத்தகைய இனிப்பு கடை நோட்டீஸ் ஆனது இப்படிப்பட்ட விளம்பரத்தை பரப்பி வருவது மக்களிடையே குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.