அடடா..! 11 ஆம் தேதி வரை வெளுத்து வாங்கப் போகுதா மழை.? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்..! 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வெப்பசலனம் காரணமாக திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ராமநாதபுரம் நாகப்பட்டினம் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் கடலூர் தஞ்சாவூர் விழுப்புரம் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அதேபோன்று தேனி நீலகிரி திண்டுக்கல் கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 11ம் தேதி வரை அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில நேரங்களில் மட்டும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில்  ஐந்து சென்டி மீட்டர் மழையும் கன்னியாகுமரியில்  3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மாலை பெய்த திடீர் மழையால்  சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.