வரும் 18ஆம் தேதி தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதால் கேரள அரசு எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 8 ஆம்  தேதி தொடங்கியது. தொடக்கத்தில் மழை சற்று அதிகமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாமல் பொய்த்து போனது. இந்த நிலையில் வரும் 18ம் தேதி பருவமழை தீவிரமாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மக்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது என்றும் அதற்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, பதினெட்டாம் தேதி தொடங்கும் இந்த மழையானது ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கும் என்றும், அப்போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவளம், வடகரா, விழிஞ்சம் போன்ற இடங்களில் கடல் சீற்றமாக காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை ஒரு வார காலம் நீடிக்கும் என்பதால் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.