தொடங்கியது தென்மேற்கு பருவ மழை..! தீருமா தாகம்..! 

இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி தற்போது கோழிக்கோடு எர்ணாகுளம் மலப்பபுரம் திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களில் தீவிர கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிகவும் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது கூடுதல் தகவல். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேரள மாநில அரசுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், குறைந்தபட்சம் 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் கேரள மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மாலத்தீவு லட்சத்தீவுகள் மற்றும் அரபிக் கடல் பகுதியில் மேகங்கள் அதிகரித்துள்ளதாகவும், கேரளாவில் பருவமழை தொடங்கிவிட்டதன் எதிரொலியாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யவும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது