தினமும் 5 நிமிடம் மட்டும் ஒதுக்கினால் போதும்..வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!!
நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தாவிட்டால், ஆபத்தான நோய்களுக்கு பலியாவது உறுதி. எனவே, ஆரோக்கியத்தை பராமரிக்க ஐந்து நிமிட விதியை உடனே பின்பற்றுங்கள். அவை..
தற்போது நாம் நவீன வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எனவே, ஆரோக்கியமாக இருக்க பலர் பலவிதமான முயற்சியில் ஈடுபடுகின்றனர். உடற்பயிற்சி முதல் உணவு வரை என அனைத்திலும் பார்த்து பார்த்து செய்கின்றனர். ஆனால், இதையெல்லாம் செய்யாவிட்டாலும் ஒருநாளில் 5 நிமிட விதியை கடைபிடித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் தெரியுமா..? அது என்ன.. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்..
இன்றைய காலகட்டத்தில், 95% மக்கள் எந்தவொரு உடல் செயல்பாடு செய்யாமல் மோசமான உடல்நலத்தால், பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உட்கார்ந்த வாழ்க்கை முறை நீரிழிவு, இதய நோய்கள் போன்ற ஆபத்தான நோய்களுக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இதனால் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை எப்படி குறைப்பது என்று நீங்கள் யோசிக்கிங்களா..? ஆனால் அதை சுலபமாக தீர்க்க முடியும்.
ஆம்..இந்த உட்கார்ந்த வாழ்க்கை முறையை உடைக்க ஒரு நல்ல வழி உள்ளது என்று கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து ஆய்வு ஒன்றும் நடத்தினர். அதில், ஆராய்ச்சி குழு 11 தன்னார்வலர்களை நியமித்து, 8 மணி நேரம் நாற்காலியில் உட்கார வைத்து, அவர்களை மடிக்கணினிகளில் வேலை செய்ய, படிக்க, தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதித்தனர். அவர்கள் அனைவரும் 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும் அவர்களுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
அதுமட்டுமின்றி, அவர்களுக்கு 5 நாட்களில் பின்வரும் ஐந்து முறைகளை சோதித்தனர். அவை..முதல் நாளில், எட்டு மணி நேரம் அவர்களுக்கு எந்தவொரு நடைபயிற்சியும் இல்லை. பிறகு அடுத்து அடுத்து நாட்களில், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு நிமிடம், ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிமிடம், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்கள் மற்றும் இறுதியாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்கள் என்று நடைபயிற்சி செய்தனர்.
எது சிறந்தது?
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் 5 நிமிடங்கள் நடப்பது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை குறைக்கும். அதுமட்டுமின்றி, இது இரத்த குளுக்கோஸ் மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் கணிசமாகக் குறைக்கிறது. மேலும், கார்டியோமெடபாலிக் ஆபத்து காரணிகள் ஒவ்வொரு முறையும் குறைக்கிறது. நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதை ஒப்பிடும்போது, இது இரத்த சர்க்கரை அளவை 58% குறைக்கிறது என்று ஆய்வில் வந்துள்ளது.
அதுபோல, அவர்களின் மனநிலை, சோர்வு மற்றும் செயல்திறன் நிலைகளை ஆராய்ந்ததில், நடைபயிற்சி மூலம் சோர்வு மற்றும் மனநிலையில் முன்னேற்றம் குறிப்பிடத்தக்க குறைப்பு காணப்பட்டதாக தெரிவித்தனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் குறைந்தது 10,000 படிகள் தவறாமல் நடப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். குறிப்பாக, பகலில் எந்த உடற்பயிற்சியும் செய்யாதவர்கள், நடைப் பழக்கம் இல்லாதவர்களை விட இப்படி நடப்பவர்கள் குறைந்தது ஐந்து வருடங்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்தும் ஜெர்மனியில் பத்தாயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதை எப்படி செய்ய முடியும்?
- நாள் முழுவதும் உட்கார்ந்து இருக்காமல் நடக்க ஏதாவது காரணங்களைக் கண்டறியவும்.
- தண்ணீர் குடிக்க அவ்வப்போது எழுந்து செல்லுங்கள்.
- தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குங்கள். காரணம், இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- போன் பேசும் போது ஒரே இடத்தில் நிற்காமல் கொஞ்சம் நடந்து பேச பழகுங்கள்
- வீட்டில் நாற்காலியில் உட்காருவதை தவிர்ப்பது ரொம்பவே நல்லது.
- குறிப்பாக, வீட்டில் இருந்து வேலை செய்தால் மெத்தையில் உட்கார வேண்டாம்.