பண்பாடு, கலாச்சாரத்தின் வரிசையில், காலம் காலமாக உண்டு வந்த உணவுப் பழக்கமும் மாறத் தொடங்கி நமது திடமான உணவு முறை, என்பதே மறைந்துவிட்டது. எல்லாவற்றையும் முயன்று பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் வகையையும் ஒரு கை பார்த்தாலும், அவை உடலுக்கு ஏற்புடையதல்ல என தெரியவந்தபோது விட்டிருக்கவேண்டும்.

ஆனால் மாடர்ன் உணவுகள் என்ற பெயரில் ஒரு அந்தஸ்து அளிக்கப்பட்டுவிட்ட இந்த வகை உணவுகள் இளைய தலைமுறையினரின் வாழ்க்கை முறையில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. முன்னோர் நூறு வயதை தாண்டியும் நோய் நொடியின்றி வாழ்ந்தனர். ஆனால், துரித உணவுகளால் இந்த தலைமுறை 50 வயதிற்குள் அனைத்து நோய்களாலும் பாதிக்கப்பட்டு துரிதமாக இறந்துவிடுகிறது. புட் பாய்சன் முதல் புற்றுநோய் வரையான அனைத்துவகை நோய்களும் துரித உணவுகளோடு இலவசம்.

மனித சந்ததியே இல்லாமல் செய்துவிடும் அழிவுத்திறன் கொண்டவை துரித உணவுகள் எனத் தெரியவந்துள்ளது. பெண்கள் அளவுக்கு அதிகமாக துரித உணவுகளை உட்கொள்வது கருப்பையை பாதிக்கும் என்றும் கருத்தரிக்கும் திறனையே அழித்துவிடும் என்றும் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அதே போன்று ஆண்களின் உடலில் ஆண்மையின் அடையாளத்தையே அழித்து ஒழித்து விடும் என்றும் ஆண்கள் சந்ததியை உருவாக்க இயலாத நிலையை ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது. 

துரித உணவுகளால் ஏற்பட வாய்ப்புள்ள மனித சமுதாயத்தின் அழிவை தடுத்து  நிறுத்தி சந்ததியை காக்க வேண்டியது நமது பொறுப்பு. இனியாவது துரித உணவுகளை தவிர்த்து பாரம்பரிய இயற்கை உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நலம் பெறுவோம்.