அடேங்கப்பா... தமிழ்நாட்டுல மழை பெய்யுமாம்! குளிர்காலத்துல மழையா?

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வட கிழக்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவிற்கு மழை தரவில்லை என்றாலும், அவ்வப்போது உருவான புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளிலும் மழை பரவலாக இருந்தது.

அதன் பின்னர் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதமான இம்மாதத்தில் கடும் குளிர் நிலவி வந்தது. இந்தியா முழுக்கவே இந்தஆண்டு இயல்பை காட்டிலும் குளிர் சற்று அதிகமாக இருந்ததை உணர முடிந்தது. அதன் விளைவாக, இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த மாதம் கொடைக்கானலில் அதிக குளிரால் மைனஸ் டிகிரியை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும், தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக்காற்றும் நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானமே மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.அதற்கேற்றவாறு  இன்று காலை முதலே சென்னை முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இடையிடையே லேசான வெயிலும் காணப்படுகிறது.