ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தாமதமாக ஏற்பட்டாலும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்தியாவில் பல மாநில அரசுகள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. உதாரணமாக தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் கேரிபேக்குகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கப்புகளுக்கு மாற்றாக பேப்பர் கப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதனை காட்டிலும் வித்தியாசமான மற்றும் உடல் நலத்துக்கும் ஆற்றல் அளிக்கும் வகையில், ஹைதராபாத்தை சேர்ந்த ஜெனோமேலேப்ஸ் என்ற நிறுவனம் இயற்கையான தானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கப்புகளை அறிமுகம் செய்துள்ளது. தான் தயாரித்துள்ள அந்த கிளாசுக்கு Eat cup என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகளுக்கு மாற்றாக Eat cup இருக்கும். இந்த கப்புகள் முழுக்க இயற்கை தானியங்களால் தயாரிக்கப்படுவது. மேலும் செயற்கையான கோட்டிங் எதுவும் இருக்காது. சூடான அல்லது குளிர்பானம் ஊற்றியது முதல் 40 நிமிடம் வரை Eat cup மிருதுவாகவே இருக்கும். 

மேலும் அந்த கப்பால் பானத்தின் சுவையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. ரூ.25 கோடி முதலீட்டில் இதற்காக ஆலை அமைக்க உள்ளோம் என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.