உங்க வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கட்லெட் செஞ்சு கொடுங்க.. ரெசிபி இதோ!
இந்த பதிவில் உருளைக்கிழங்கு வைத்து கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம். உருளைக்கிழங்கினால் செய்யப்பட்ட உணவுகளை செய்து கொடுத்தால் போதும் தட்டு காலியாகும். அதிலும் குறிப்பாக, உருளைக்கிழங்கு வைத்து கட்லெட் செய்தால் சொல்லவா வேண்டும். நீங்கள் இந்த உருளைக்கிழங்கு கட்லெட் உங்கள் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுங்கள். அவர்களது விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும், இது சாப்பிடுவதற்குமிகவும் சுவையாக இருக்கும். வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருப்பதால், குழந்தைகள் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். மேலும் இந்த கட்லெட் செய்வது மிகவும் எளிது. சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் உருளைக்கிழங்கு கட்லெட் எப்படி செய்வது, அதற்கான செய்முறை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் 'சோயா கட்லட்' ... எப்படி செய்வது..?
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
கடலை மாவு - 1 1/2 ஸ்பூன்
அரிசி மாவு - 1 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 கப்
பிரட் துகள்கள் - 1 கப்
(பொடியாக பொடிதாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடியளவு
கருவேப்பிலை - 1 கைப்பிடியளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு பிடித்த டேஸ்டியான 'சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்' செய்வது எப்படி?
செய்முறை:
உருளைக்கிழங்கு கட்லெட் செய்ய முதலில், உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்றாக கழுவி குக்கரில் மூன்று விசில் வரும் வரை அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நன்கு மசித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது மசித்த உருளைக்கிழங்குடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளுங்கள். இப்போது பிசைந்து வைத்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு தட்டில் பிரட் துகள்கள் போட்டு அதன் மீது தட்டி வைத்துள்ள மாவை புரட்டி போட்டு தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி!! இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் ஒருமுறை உங்கள் வீட்டில் கண்டிப்பாக செய்து பாருங்கள். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D