குடிக்க சொட்டு நீர் இல்லாமல் ஊசலாடும் கிராமம்...! 

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் இல்லாமலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர் மக்கள். 

குறிப்பாக கரூர் அருகே உள்ள முனையனூர் என்ற கிராமத்தில் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி உள்ள பொதுமக்கள் தற்போது காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கரூர் மாவட்ட உப்பிடமங்கலத்தை அடுத்து உள்ளது முனையனூர் என்ற கிராமம்.  இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கோடை காலம் தொடங்கிய உடனேயே குடிநீர் பிரச்சினை தொடங்கி உள்ளது. 

அதன்படி கடந்த 3 மாதகாலமாக, காவிரி நீர் கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர், மேலும் கிராமத்தில் இருந்த ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பழுதாகி உள்ளதால், தண்ணீர் இன்றி மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும்,  நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை வைத்திருந்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் காலிகுடங்களுடன் ஒன்று சேர்ந்து கரூர் முதல் பஞ்சப்பட்டி வழியாக செல்லக்கூடிய சாலையில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுடன் தற்போது போலீசாரும் ஊராட்சி அலுவலர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் இப்பொழுதுதாவது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.