கொரோனா எதிரொலி..! சிங்கப்பூர் போகாதீங்க... மத்திய அரசு திட்டவட்டம் ..! 

உலக அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பரவும் ஒவ்வொரு செய்தியும் மக்களை மேன்மேலும் வேதனை அடையச் செய்கிறது என்றே நாம் சொல்லலாம்

சீனாவைப் பொறுத்தவரையில் முதன்முதலாக ஹுவாங் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மிக எளிதாக அதி வேகமாக பரவியது. இதன் காரணமாக இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஒரு நிலையில் நிலைமையை சமாளிக்க சீனா பெரும்பாடுபட்டு வருகிறது. மக்களின் பாதுகாப்புக்கு தேவையான மாஸ்க்  தயாரிப்பு செய்வதிலும் முழுமையாக ஈடுபட்டு உள்ளது. 

மக்களிடையே பரிமாற்றங்களை குறைக்கவும் ரூபாய் தாளை கூட புற ஊதாக் கதிர்களைக் கொண்டு, தாளில் இருக்கக்கூடிய வைரஸை நீக்கி வருகிறது. நிலைமை இப்படி இருக்கும் தருவாயில், மற்ற உலக நாடுகளும் தங்கள் நாட்டு மக்கள் பாதிக்காத வண்ணம் இருக்க பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. அந்த வகையில் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ள உலகநாடுகள், சீனாவிலிருந்து வருகை புரியும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா தாக்கம் இல்லை என உறுதி செய்த பின்னரே அவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த ஒரு நிலையில் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தோனேசியா, மலேசியா நேபாளம், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மூச்சுத்திணறல் இருமல் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். சோதனையின் முடிவில் அவர்களுக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டால் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கு  யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் குறிப்பாக மலேசியா செல்லவோ அல்லது சீனா செல்லவோ மற்ற சில குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லவோ மத்திய அரசே தற்போது வேண்டாம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.