கொரியாவில் தான் உலகின் மிக விலையுயர்ந்த உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.35 ஆயிரத்திற்கு விற்கப்படும் பின்னணி என்ன என்பதை இங்கு காணலாம்.

'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பது பலராலும் மறுக்க முடியாது. உப்பில்லாத வீடே கிடையாது. உணவில் கொஞ்சம் உப்பு குறைவாக இருந்தாலும் ருசியே இல்லாதது போல இருக்கும். உலகம் முழுக்கவே உப்பு விலை மலிவாக கிடைக்கக் கூடிய பொருள். ஆனால் அந்த உப்பைக் கூட ரூ.35 ஆயிரம் என சொல்லவும், அதை வாங்கவும் ஆள் இருக்கிறது. சில அரிய வகை உப்புகளுக்கு மவுசு அதிகம். அதில் கொரிய மூங்கில் உப்புக்கும் தனி இடம் உண்டு.

கொரியாவில் ஊதா மூங்கில் உப்பு அல்லது ஜுகியோம் என அழைக்கப்படும் மூங்கில் உப்புக்கு விலை வெறும் கால் கிலோவே $100 (ரூ. 8,811) ஆகும். ஒரு கிலோவ என்றால் இந்திய மதிப்பில் ரூ. 35,246 ($ 400). அடேங்கப்பா! அப்படி என்ன தான் அதில் சிறப்பு? வாங்க பார்க்கலாம்.

இந்த உப்பு கொரிய உணவு வகைகளுக்கு மட்டுமின்றி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. மூங்கில் உப்பும் கடல் உப்புதான். ஆனால் தயாரிப்பு முறை வித்தியாசமானது. கொரியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட உப்பை ஒரு தடிமனான மூங்கில் மரத் தண்டில் வைப்பார்கள். இதனை சிவப்பு களிமண்ணால் மூடி, பின் பைன் மர விறகுகளால் மூட்டப்பட்ட சூளை தீயில் அதிக வெப்பநிலையில் 9 முறை சுடுவார்கள். இதன் கூடவே பல சிக்கலான செயல்முறைகளும் உண்டு.

உப்பு நன்கு சூடாகி கெட்டியான பின் வெளியே எடுப்பார்கள். பின் அதை பொடியாக்கி இன்னொரு மூங்கில் தண்டில் நிரப்பி, மீண்டும் சுடுவார்கள். இப்படி 9 முறை மாறி மாறி செய்த பின் தான் அந்த உப்பை தயாரிக்க முடியும். கிட்டத்தட்ட 1000 டிகிரி செல்சியஸ் வரை அதை வெப்பப்படுத்துகிறார்கள். இந்த தயாரிக்கும் விதம் தான் அதன் அதிகமான விலைக்கும் காரணம்.

தயாரிப்பு செயல்முறைக்கு பின் தண்டில் உள்ள உப்பை பார்த்தால் அதில் நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய படிகங்கள் இருக்கும். இந்த உப்பு மூங்கிலின் சுவையை உறிஞ்சுவதால், காம்ரோஜங் என்கிற இனிப்பு சுவை உப்புக்கு வரும். வெப்பத்தில் நன்கு சுடப்பட்ட மூங்கில் உப்பை, "ஊதா மூங்கில் உப்பு" என்கிறார்கள். இது காண்பதற்கு ஊதா நிறமாக இருக்கும். இந்த உப்பை தயாரிக்க 50 நாட்கள் ஆகுமாம். இப்படி பல செயல்முறைகளுக்குப் பின் தயாரிக்கப்படும் உப்புக்கு மவுசு இருக்க தானே செய்யும்!