dec 19 onward who ever got good opportunities in this Saturn transit

வரும் டிசம்பர் 19 ஆம் தேதி, ஆன்மிக எண்ணம் உள்ளவர்கள் மட்டுமல்ல, ஜாதகம் ஜோதிடம் ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமல்ல சதாரண மனிதர்களும் கூட ஆர்வத்துடன் அறிந்து கொள்ளும் ஒரு நாளாக மாறியிருக்கிறது. அன்றுதான் சனி பகவான், பெயர்ச்சி ஆகிறார். அவர் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். 

இவரது இந்தப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை, யாருக்கு நன்மையும் தீமையும் கலந்து வருகிறது, எவரெல்லாம் பரிகாரம் செய்து கொண்டு, தீமைகளைக் குறைத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம். 

நவக்கிரகங்களில் கர்ம கிரகம், அதாவது தொழில் கிரகம் இந்த சனி கிரகம். வாழ்வில் அனைத்து விதமான நல்ல விஷயங்களையும் அளிப்பவர், சூரியனின் மகனான மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான்.

சனி பகவான், மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் குரு. நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் மூன்றுதான்! ஆயுள், தொழில், கர்மா. இந்த மூன்றுக்கும் அதிபதி சனி பகவான். அதாவது காரகன் என்பார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம். 

சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள் என்ன என்று பார்த்தால், அவருக்கு ஏன் இவ்வளவு பயபக்தியுடன் மக்கள் மதிப்பளிக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளலாம். உழைப்பு, சமூக நலம், தேசத் தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணைக் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர். 

இந்த சனிப் பெயர்ச்சியில், பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் படி, 
நன்மை பெறும் ராசிகள்: மேஷம் - கடகம் - சிம்மம் - துலாம்
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன் பெறும் ராசிகள்: கும்பம் - மீனம்
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம் - மிதுனம் - கன்னி - விருச்சிகம் - தனுசு - மகரம் ஆகியவை தான்...

இனி, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி நடக்கிறது, அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் எனப் பார்க்கலாம்...

மேஷ ராசிக்காரர்களுக்கு இது பாக்கிய சனி. எனவே, தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்சனை ஆகியவை தலை தூக்கும். சற்று எச்சரிக்கையாக இருக்கலாம். 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இது, அஷ்டம சனி. அதாவது எட்டில் வந்து அமர்ந்த சனி. எனவே, அனைத்து விஷயங்களிலும் சற்று கவனமுடன், நேர்மையுடன் இருக்க வேண்டும். 

மிதுன ராசிக்காரர்களுக்கு இது கண்டக சனி. எனவே, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவைப்படும். மேலும், வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலங்கள் உருவாகக் கூடும். அதைத் தவிர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

கடக ராசிக்காரர்களுக்கு இது, ரண ருண சனி ஆகும். எனவே, உடல்நலத்திலும், கடன்கள் வாங்குவதிலும் சற்று கவனம் தேவைப் படும். 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இது, பஞ்சம சனி. இந்தக் காலத்தில், குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படக் கூடும். எனவே, அதைத் தவிர்க்கப் பாருங்கள். 

கன்னி ராசிக்காரர்களுக்கு இது அர்த்தாஷ்டம சனி. அதாவது நாலாம் வீட்டில் அமர்வது. இந்தக் கால கட்டத்தில், வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதை சற்று தள்ளிப் போடலாம். அல்லது, யோசித்து, கவனத்துடன் இருந்து செய்யலாம். 

துலா ராசிக்காரர்களுக்கு இது, தைரிய வீர்ய சனி. எனவே, தைரியம் அதிகரிக்கும். உங்களின் மதியூகம் வெளிப்படும். அதற்கேற்ற தொழில், பணிகளில் ஈடுபடலாம். இந்தக் காலக் கட்டத்தை இது தொடர்பான விஷயங்களில் மேம்பாடு அடைய பயன்படுத்திக் கொள்ளலாம். 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது, வாக்குச் சனி. எனவே, அடுத்தவர்களுக்கு வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவைப் படும். ஜாமீன் கையெழுத்திடுவது போன்ற விஷயங்களில் எச்சரிக்கை தேவை. 

தனுசு ராசிக்காரர்களுக்கு இது ஜென்ம சனி. எனவே, அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவைப் படும் காலகட்டம் இது. 

மகர ராசிக்காரர்களுக்கு இது, விரயச் சனி. எனவே, தேவையற்ற செலவுகள், வீண் விரயம் ஆகியவை ஏற்படும் என்பதால், கவனத்துடன் இருக்க வேண்டும். 

கும்ப ராசிக்காரர்களுக்கு இது லாப சனி. எனினும், அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும் என்பதால், இந்தக் காலக் கட்டத்தை மதி நுட்பத்துடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மீன ராசிக்காரர்களுக்கு இது, தொழில் சனி. இந்தக் கால கட்டத்தில், தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்படும். இதை வாய்ப்புக்கு தகுந்த வகையில் பயன்படுத்திக் கொண்டு தொழிலில் முன்னேற்றம் காணலாம்.