Asianet News TamilAsianet News Tamil

பொடுகுத் தொல்லையா? இனி கவலை வேண்டாம்! சமையலறையில் ஒளிந்திருக்கும் மகத்துவம்..

பொடுகு பிரச்சனைக்கு வீட்டில் இருந்த படியே தீர்வு காணும் 8 எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Dandruff problem home remedy tips
Author
Chennai, First Published Jan 6, 2022, 2:39 PM IST

பொடுகு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது. குறிப்பாக, இளம் வயதினருக்குப் பல நேரங்களில் தர்மசங்கடத்தைத் தருகிறது. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், முடி உதிர்வு ஏற்படும். தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு. வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கிய காரணங்கள்.

‘பொடுகு பிரச்சனையைப் போக்கலாம்' என வெளியாகும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஏராளம். அவற்றை நம்பி, கண்ட கண்ட ஷாம்பூக்களை, அதிகம் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால், இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக்கூடிய மற்றும் நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் பொருள்களும்கூட பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு தரக் கூடியவை. 

Dandruff problem home remedy tips

பொடுகு பிரச்சனைக்கு வீட்டில் இருந்த படியே தீர்வு காணும் 8 எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 1. தேங்காய் எண்ணெய்  மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு மசாஜ்:

எலுமிச்சைப் பழச்சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையைத் தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலசவும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச்சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

2. தயிர் குளியல்:

தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ளவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.

3. பேக்கிங் சோடா பேக்:

ஈரமான தலைமுடியில் சிறிது பேக்கிங் சோடாவைத் தேய்க்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, தலையை அலசவும். பேக்கிங் சோடா, பொடுகுக்கு மிகச் சிறந்த நிவாரணி. இது, தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கவும், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடவும் உதவும். பேக்கிங் சோடாவை அதிக நேரம் தலையில் வைத்து இருந்தால் தலைமுடி வறண்டுவிடும்... கவனம்!

4. ஆப்பிள் சிடர் வினிகர்: 

Dandruff problem home remedy tips

ஆப்பிள் சிடர் வினிகர் பெரிய கடைகளில் கிடைக்கும். சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊற வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசிவிடவும். இது பொடுகுக்கு சிறந்த மருந்து; முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.

5. வெந்தயம்:

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.

7. ஆரஞ்சு தோல்:

ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.
 
6. வெங்காயம் மற்றும் வேப்பிலை:

வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு, தலைக்குக் குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதேபோன்று, கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்புத் தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளை அழித்துவிடும்.

8. மருதாணி இலை :

கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்னை உள்ளோர் தவிர்க்கவும்.

வாரம் ஒரு முறை இவற்றை பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை இன்றி ஆரோக்கியமாக வாழலாம்!
 

Follow Us:
Download App:
  • android
  • ios