வரலாறு காணாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு..! சவூதி இளவரசர் எச்சரிக்கை.!

கற்பனைக்கு எட்டாத அளவிற்கு  கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 14ஆம் தேதியன்று சவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளது சவுதி அரேபியா. இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என  சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இருந்தபோதிலும் ஏமனில் இருந்துதான் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் பதில் அளித்து வருகிறது. எண்ணெய்  நிறுவனம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிற்கும்  ஈரானுக்கும் இடையே பகை அதிகரித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவிக்கும்போது, 

"ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பு மற்றும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் , இல்லை என்றால் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு கற்பனைக்கு எட்டாத அளவில் விலை உயரக்கூடும் ..அப்படி விலை உயர்ந்தால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சவுதி மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாதிப்படைந்து பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும்; அவ்வாறு நடப்பதை தவிர்க்க வேண்டுமென்றால் ஈரானுக்கு எதிராக ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒன்றிணைந்து கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதேவேளையில் ராணுவத்தை விட அமைதி வழியில் தீர்வு காண்பது மிக சிறந்தது என இளவரசர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் பெட்ரோல் டீசல் விலையும் அதிகரிக்கும்.   அனைவருக்கும் அத்தியாவசிய பொருளாக இருக்கக்கூடிய பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.