பழைய எண்ணெய் கேன்களை இனிமேல் தூக்கி எறிய வேண்டாம். அதை வைத்தே உங்கள் வீட்டு பால்கனியை அழகாக்கலாம். தொங்கும் தொட்டிகள், சுவர் தொட்டிகள், முகம் மற்றும் விலங்கு வடிவ தொட்டிகள் என 4 சூப்பரான ஐடியாக்கள் இதோ.
அழகான செடித் தொட்டிகள் நம்ம வீட்டு பால்கனியின் அழகையே அடுத்த லெவலுக்கு கொண்டு போகும். பூத்துக் குலுங்கும் செடிகளோடு பார்க்கும்போது, ரொம்பவே ராயலாக இருக்கும். இந்த மாதிரி தொட்டிகளை நாமே வீட்டில் எளிதாக செய்யலாம். காலி எண்ணெய் கேன்களை வைத்து எப்படி விதவிதமாக பிளான்டர்ஸ் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
யானை வடிவ எண்ணெய் கேன் பிளான்டர்
எண்ணெய் கேனை ஒரு கூர்மையான கத்தியால் வெட்டி, தும்பிக்கை உள்ள யானை வடிவ தொட்டியை உருவாக்கலாம். இதற்கு, கேனை தலைகீழாகத் திருப்பி, ஓவல் வடிவத்தில் வெட்டிக்கொள்ளுங்கள். கேனின் கைப்பிடி இருக்கும் பக்கத்தில் கண்கள் மற்றும் தும்பிக்கை போல பெயின்ட் செய்யுங்கள். தண்ணீர் வடிந்து செல்ல, கேனின் மூடியில் ஒரு துளை போட்டால் போதும்.
முகம் போன்ற எண்ணெய் கேன் பிளான்டர்

எண்ணெய் கேன்களில் விதவிதமான முக பாவனைகளுடன் பிளான்டர்களை எளிதாக உருவாக்கலாம். முதலில் ஒரு பேஸ் கலர் அடித்துவிட்டு, பின்னர் பெர்மனன்ட் மார்க்கர் கொண்டு கண்கள், உதடுகள் வரைந்தால் போதும். உங்கள் ஃபேன்ஸியான பிளான்டர் ரெடி. இதில் நீங்கள் பாம்புக்கற்றாழை (Snake Plant), சோற்றுக்கற்றாழை (Aloe Vera) போன்ற செடிகளை நடலாம்.
வெவ்வேறு வடிவங்களில் பிளான்டர்கள்

பயன்படுத்திய எண்ணெய் கேன்களை பழைய இரும்புக்கடைக்கு போடுவதற்குப் பதிலாக, நிலா வடிவம் அல்லது உங்களுக்குப் பிடித்த வேறு டிசைன்களில் வெட்டி பிளான்டர்களாக மாற்றலாம். இதில் சக்குலன்ட் (succulent) செடிகள் முதல் பூச்செடிகள் வரை எதை வேண்டுமானாலும் நடலாம். கயிறு கட்டி தொங்கும் தொட்டியாகவும் பயன்படுத்தலாம். இதற்கு, கேனின் மேல் பகுதியில் இரண்டு துளைகள் போட்டு கயிற்றை நன்றாகக் கட்ட வேண்டும். தொட்டியில் மண் நிரப்புவதற்கு முன், தண்ணீர் வடிந்து செல்ல துளை போடுவதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
சுவரில் மாட்டும் பிளான்டர்
கேனை நீளவாக்கில் வெட்டி, அதன் பின்னால் ஒரு துளை போட்டு சுவரில் ஸ்க்ரூ வைத்து மாட்டலாம். தண்ணீர் வடிந்து செல்ல ஒரு துளை போட்டு, சிறிய செடிகளை இந்த எண்ணெய் கேன் தொட்டியில் நட்டு உங்கள் சுவரை அழகாக்குங்கள்.


