கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக்' நிறுவனமும், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பும் இணைந்து கோவாக்சின்' என்ற தடுப்பூசி தயாரித்துள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி கோரி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதனை ஆய்வு செய்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழுவினர், இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதிக்கலாம்' என பரிந்துரை செய்திருந்தன.

இது தொடர்பாக இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் சோமானி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் பரிந்துரையை ஏற்று, கோவாக்சின், கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

இரண்டு தடுப்பூசிகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கலாம். இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட வேண்டும். இந்த தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனை தொடர்ந்து நடக்கும். கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசியை 3வது கட்ட பரிசோதனை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.