கர்நாடகாவில் 9 மாத கர்ப்பிணி செவிலியர் ஒருவர் நோயாளிகள் கவனிக்க அக்கறையுடன் பணிக்கு வந்து செல்வது பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முன்னணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோரின் சேவை மகத்தானதாக உள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவியது முதல் இன்று வரை அனைத்து மருத்துவர்களும் இரவு பகலாக நோயாளிகளுக்கு சேவை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் கர்ப்பிணி செவிலியர் ஒருவர் கர்நாடகாவில் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

 கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் உள்ள கஜனூரு கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது மாத கர்ப்பிணி செவிலியர் ரூபா பர்வீன். அப்பகுதியில் உள்ள ஜெயச்சாமரா ராஜேந்திர அரசு மருத்துவமனையில் நோயாளிகளை கவனிக்க அக்கறையுடன் தினந்தோறும் வருகை தருகிறார். இவர், நோயாளிகளுக்கு சேவை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

 இருப்பினும் அவரது பணி ஒதுக்கீடு  கொரோனா வைரஸ் நோயாளிகளை கவனிப்பது அல்ல. பொதுவான நோயாளிகளை கவனித்து வருகிறார். கர்ப்ப கால விடுப்பு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படும் ரூபா தொடர்ந்து தனது பணிக்கு விசுவாசமாக ஈடுபட்டு வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், ரூபா தன்னுடைய உடல்நிலையில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என பலரும் அன்பு கட்டளை விடுத்து வருகின்றனர். இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், செவிலியர் ரூபா போன்றோரின் சேவை மனப்பான்மை கொண்ட செவிலியர்களுக்கு  சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகின்றது.