இந்தியாவில் கொரோனா 2வது அலை மோசமான பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. நாளுக்கு நாள் உயரும் பாதிப்புகள், உயிரிழப்புகளை கண்டு மக்கள் உச்சகட்ட அச்சத்தில் உள்ளனர். கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் மாஸ்க் அணிவதும், தனி மனித இடைவெளியை கடைபிடித்தாலும் முக்கியமானவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பல்வேறு மாநிலங்களிலும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

இப்படிப்பட்ட இக்காட்டான சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் காரில் கணவருடன் பயணித்த பெண் ஒருவர் மாஸ்க் அணியாது குறித்து கேள்வி எழுப்பிய காவல்துறையினரை மிகவும் தரக்குறைவாக பேசி சண்டையிடும் வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. அந்த காரில் இருந்த பங்கஜ் குப்தா மற்றும் அப்ஹா குப்தா தம்பதியினரை மாஸ்க் அணிந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தினர். 

‘நான் எனது காருக்குள் இருக்கும்போது ஏன் மாஸ்க் போட வேண்டும். நான் எனது கணவருக்கு முத்தம் கொடுக்கவேண்டும் என்றால் என்ன செய்வது. நான் என் கணவருக்கு முத்தம் கொடுப்பேன். நீங்கள் தடுத்து நிறுத்துவீர்களோ?’ என்றெல்லாம் அந்த பெண் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் அதிக அளவில் பரவியது. இதையடுத்து அவர்களுக்கு மாஸ்க் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தும் அந்த பெண் போலீசாரிடம் தொடர்ந்து கத்தியதால் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த ஜோடி ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் போலீசாரை தரக்குறைவாக பேசிய அப்ஹா குப்தா சிவில் சர்வீஸ் தேர்வை முடித்துவிட்டு இண்டர்வியூவிற்காக காத்திருக்கிறார் எனக்கூறப்படுகிறது. ஐஏஎஸ் ஆக நினைத்து கனவு கண்டவர் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். யதார்த்தம் புரியாமல் கோபத்தில் கொந்தளித்த அந்த பெண்ணின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.