உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனையடுத்து, இந்தியா தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகானில் பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்த நோய்க்கு இதுவரை உலக முழுவதும் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து திரும்பிய 3 கேரள மாணவர்களுக்கு பாதிப்பு இருந்தாலும் அவர்கள் சிகிச்சைக்குப்பின் குணமடைந்ததால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கடந்த 3 நாளில், இத்தாலி சுற்றுலா பயணிகள் 16 பேர் உட்பட 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பீதியால், குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஹோலி கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1. கொரோனா அறிகுறிகள் என்ன?

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் மிக மிக சாதாரணமாகவே இருக்கும்

* ஜலதோசம்
* காய்ச்சல்
* சளி தொல்லை
* வறண்ட இருமல்
* மூச்சு விடுவதில் சிரமம்

இதோடு சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்படலாம். எனவே சாதாரண காய்ச்சல் என்றாலும் கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக முறையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியம். 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வைரஸ் தொற்று எளிதில் பரவும் வாய்ப்பிருப்பதால் அவர்களை ஜாக்கிரதையாக பாரத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

2. என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைவதாலோ அச்சப்படுவதாலோ எந்த பயனும் இல்லை. விழிப்புணர்வுடன் இருந்தால் வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

* கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

* குளித்து சுத்தமாக இருந்தால் அவசியம்

* நக இடுக்கு, கைகளின் பின்பக்கங்களை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.

* வெளியில் செல்லும் போது முககவசம் அணியவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட எண்95 மாஸ்க் அணிவது சிறந்தது.

* காய்ச்சல், ஜலதோசம் இருந்தால் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று தனி அறையில் ஓய்வெடுக்க வேண்டும்.

* குறைந்தது 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.

3. என்ன செய்யக்கூடாது

* ஹை-ஃபை கை குலுக்குவது, கட்டிப்பிடித்தல், முத்தம் தருதல் போன்றவற்றின் மூலமும் வைரஸ் பரவும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.

*  பொது இடங்களில் நெரிசல் மிக்க பகுதிகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

* தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகில் செல்லக்கூடாது

* வாயை மூடிக்கொண்டு தும்மவோ, இருமவோ செய்ய வேண்டும்.

* மற்றவரிடமிருந்து குறைந்தபட்சம் 3 அடி தள்ளி நின்று பேச வேண்டும்.

* விலங்குகளோடு விளையாடுவது, சரணாலயங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.