கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 31 கர்ப்பிணி பெண்கள், செவிலியர் உள்ளிட்ட 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேருக்கு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் யாராவது கொரோனா பரிசோதனைக்கு வந்தார்களா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், 31  நிறைமாத கர்ப்பிணி பெண்கள் மற்றும் கோயம்பேடு தொடர்பில் உள்ளவர்கள் என மொத்தம் 79 பேருக்கு நோய்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. . இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், இதை அதிகாரபூர்வமாக மாவட்ட நிர்வாகம் வெளியிட மறுத்துவிட்டது. எனினும், குழப்பத்தை போக்க ஆட்சியர் கிரண்குராலா உத்தரவின்படி கள்ளக்குறிச்சியில் 10 கர்ப்பிணிகளும், உளுந்தூர்பேட்டையில் உள்ள கர்ப்பிணிகளும் மறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் தொற்று பாதிக்கப்பட்ட யாருக்காவது ஸ்கேன் பார்த்த வகையில் தொற்று பரவி இருக்கலாம் அல்லது முண்டியம்பாக்கம் ஆய்வகத்தில் ஏதாவது குளறுபடிகள் நடந்து இருக்கலாம் என்றனர். ஒரே நேரத்தில் 31 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.