கொரோனா முன் தோற்றுப்போன பணம், பதவி, பந்தா - ஜாதி மதம் பேதம்..! 

கொரோனா என்றாலே சற்று தள்ளி நின்று பேச தோன்றுகிறது அல்லவா..? ஆம். முதன் முதலில்  சீனாவின் ஹுவாங் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல   மற்றவர்களுக்கு பரவி உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  இறந்துள்ளனர் என்பது வருத்தமளிக்கும் நிகழ்வாக உள்ளது

இந்த நிலையில் இந்தியாவில் மெல்ல மெல்ல பரவி வருகிறது. தற்போது வரை 3 பேர் பலியாகி உள்ளனர். பலர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்

கொரோனா என்ற ஒரு வைரஸ் வருவதற்கு முன் மிகவும் பிஸியாக, மக்கள் கூட்டம் அதிகமாக... எங்கு பார்த்தாலும் மால்கள், கடைகள், சினிமா தியேட்டர்கள், அனைத்தும் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு விஷயம், இப்போது அப்படியே முடங்கி உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் கேன்சர், இதய நோய் என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இவை எதற்கும் பயப்படாத மக்கள் கொரோனா என்ற ஒன்றுக்காக பயந்து பயந்து ஓடுகிறோம்.

காரணம் இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மிக எளிதாக தொற்றக்கூடிய ஒன்று என்பதால் மட்டுமே... இது ஒரு பக்கம் இருக்க கொரோனாவை பொறுத்தவரையில் ஏழை பணக்காரன் என்பது வித்தியாசம் இல்லை. உயர்பதவியில் இருக்கிறார்களா சாதாரண ஊழியரா? என்பது பொருட்டே இல்லை. ஜாதி மதம் பேதம் என அனைத்துமே கொரோனா முன் ஒன்றுமில்லை என்று சொல்லலாம். 

மற்ற  நோய்களுக்கு அவரவர் வைத்திருக்கும் பணத்தை வைத்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் விதம் மாறுபடும். ஆனால் ஒருவருக்கு  கொரோனா  வந்து விட்டால், இதுவரை அதற்கான தடுப்பு மருந்தோ அல்லது சரியான சிகிச்சையோ கிடையாது.

எனவே எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் சரி... எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் சரி... இதற்கு முன்னதாக வாழ்ந்த வாழ்க்கை பெரிய பந்தாவாக பார்க்கப்பட்டாலும் சரி... உயர் ஜாதியாக இருந்தாலும் சரி.... வேறு மதமாக இருந்தாலும் சரி.. பாகுபாடு இல்லாமல்  தாக்கக்கூடியது கொரோனா.

இதை எல்லாம் வைத்து பார்க்கு போது  கொரோனா முன் பணம், பதவி, பந்தா - ஜாதி மதம் பேதம் அனைத்தும் தோற்றே போனது என சொல்லலாம்